Monday, June 26, 2017

நகர்வலம் - ஷேர் ஆட்டோவில் ஒரு சவாரி


மற்ற நகரங்களை விட நம் தலைநகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் அதிகம் தான். சிறுநகரத்திலிருந்தோ கிராமத்திலிருந்தோ நகரத்திற்குப் புதிதாய் வருபவர்களுக்கு ஷேர் ஆட்டோப்பயணம் மறக்க முடியாததாய்த்தான் இருக்கும். பேருந்துப்பயணத்தில் வேறுபாலினத்தவர் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் பக்கத்து இருக்கையில் உட்கார்வதற்கு , ஏன்...சற்றுத்தள்ளி உட்கார்வதற்கே சில மக்கள் யோசிப்பார்கள். ஆனால் இங்கே யாரென்றே தெரியாதவர்களுடன் நாம் இடித்துக்கொண்டு நெருக்கி உட்கார்ந்து பயணம் செய்வதைப் பார்த்தால் அவர்களுக்கு விசித்திரமாய்த்தான் இருக்கும்.

பரபரப்பான வேளைகளில் ஷேர்ஆட்டோவில் ஒரு பெண்ணருகே உட்கார ஆண் தயங்க, பெண் துணிச்சலுடன் சற்றுத் தள்ளி உட்கார்ந்து இடங்கொடுக்கும் எதார்த்த புரிதலும் இங்கேதான் அரங்கேறும். கூட்டம் அதிகம் உள்ள சமயத்தில், ஓட்டுநர் இருக்கையே சிறியதாய் இருக்கும். அதிலும் நுனியில் உட்கார்ந்து கொண்டு இரு ஆண் பிரயாணிகளை இருபக்கங்களிலும் ஏற்றிக் கொண்டு பெரிய மனம் கொண்ட பெருமகனாய் ஆட்டோ ஓட்டுநர் நடந்துகொண்டாலும் பணத்திற்காக இவ்வாறு செய்கிறார் என்று பழி போடும் மக்கள் கூட்டத்துள் ஒருவராய் நாமும் இருக்கத்தான் செய்கிறோம்.

புதிதாய் ஷேர் ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களா அல்ல விதிவசமா என்று தெரியவில்லை...ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒரு செங்குத்தான மேட்டில் வண்டியை ஏற்ற, அது தலைகுப்பிற விழும் விபத்துக்களும் நடக்கத்தான் செய்கிறது. நல்லவேளை உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து ஆட்டோவைத் திருப்பி உள்ளே உள்ளப் பயணிகளை பத்திரமாக மீட்டார்கள். பிராயணிகளைப் பத்திரமாய் வேறு ஆட்டோக்களில் அணுப்பிவிட்டு, ஓட்டுநரையும் இயல்புநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

இரவு நெடுநேரம் ஆகிவிட்டால் பெண்கள் பெரும்பாலும் தனி ஆட்டோவைத்தேர்வு செய்யாமல் ஷேர்ஆட்டோக்களையே தேர்வு செய்வதற்குதம் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருந்தாலும் மற்ற நபர் உதவுவார் என்ற நம்பிக்கைதானே!அதே இரவு நேரம் ஆண்கள் புடைசூழ தனிஒரு பெண்ணாய் சுபநிகழ்ச்சிகளில் பங்குகொண்டு ஆபரணத்துடன் பயந்து பயணம் செய்கையில், பயப்படாதீர்கள்...என்னை நம்பி என் ஆட்டோவில் ஏறிய பிரயாணியை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் என்று நம்பிக்கைவாக்குக் கொடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் நாம் வாழும் சமூகத்தில் நம்மோடு தான் இருக்கிறார்கள்.

பேருந்துக்காக கால்கடுக்க நின்று, பேருந்தின் உள்ளே சென்றும் கால்வலிக்க நின்று, இடிபட்டு மூச்சுத்திணறி, சில சமயம் பாலியல் சீண்டல்களுக்கும் பேருந்துப் பயணத்தில் ஆளாக நேரிடுகிறது. தெரிந்தே இடிக்கிறார்களா அல்லது நெரிசலில் தெரியாமல் இடிக்கிறார்களா என்று தெரியாமல் எச்சரிக்கை செய்யவா அல்லது அமைதியாய் இருக்கவா என்ற குழப்பம் பெண்களுக்கு...தனியாக ஒரு ஆட்டோவில் பயணம் செய்வதற்குத் தேவையான பொருளாதார வசதி குறைச்சலாக உள்ளவர்களுக்கு இந்த ஷேர்ஆட்டோ வசதி வரப்பிரசாதம் தான்.

காசு கொடுப்பார்கள் என்றாலும் தன் வண்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறு விழைவிப்பார்கள் என்பதனால் மது அருந்திய மனிதர்களை வண்டியில் ஏற்றாது செல்லும் ஓட்டுநர் சகோதரர்களைக் கையெடுத்துக் கும்பிட்டாலும் தகும்.என்ன... இஷ்டத்திற்குக் கட்டணத்தை நிர்ணயித்து மக்களிடம் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்...இல்லை இல்லை வழிப்பறி செய்து கொள்கிறார்கள் என்பது போன்ற கூக்கூரல்கள் எழுவதால் சிற்றுந்து எனப்படும் சிறிய பேருந்தை எல்லா இடங்களிலும் அரசாங்கம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் வாகன எரிபொருளான டீசலால் செயல்படுவதால் அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல் விலை இவர்களை அதிகமாக பாதிக்காது. நமக்கும் தடாரென்று கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி அளிக்க மாட்டார்கள். அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாத போக்குவரத்து வசதி என்றாலும் அரசு பல கட்டுபாடுகளை இவர்களிடம் விதித்திருக்கத்தான் செய்கிறது.

பெரிய ஷேர்ஆட்டோக்களில் உள்ளே படிபோன்று வைத்துப் பல பயணிகளை ஏற்றுகிறார்கள் என்பதற்காக அந்த படிகளை எடுத்துவிடச் சொல்லி சிலக்கட்டுப்பாடுகளையும் விதிக்கத்தான் செய்திருக்கிறார்கள். ஷேர் ஆட்டோக்களிலும் பல வகையான வண்டிகளை வைத்திருக்கிறார்கள். இதற்காகவே பிரத்யேகமாக சில நிறுவனங்கள் அதற்கேற்றார்போல பல வண்டிகளை தயார்செய்கிறார்கள் என்பதும் ஆச்சர்யமான விசயம் தான்.

நகரத்தின் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை அதற்குச் சான்றாகும்.7 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தாலும் இரண்டு மடங்கு ஆட்களாக சுமார் பதினைந்து பேர் செல்லக்கூடிய வித்தையை மற்றவர்கள் நம்மிடமும் நமது ஆட்டோ ஓட்டுநர்களிடம் மட்டும் தான் கற்க வேண்டும்.

நாம் இருக்கும் சமுதாயத்திலேயே நம்முள் ஒருவராய் இருந்து ஷேர்ஆட்டோவில் பல நவீன வசதிகளைப் புகுத்திய ஆட்டோ ஓட்டுநரை இந்தியன் டைம்ஸ் பத்திரிக்கை மட்டுமல்லாது அமெரிக்க பத்திரிக்கையும் பாராட்டியுள்ளது நமக்கும் பெருமையான ஒன்றுதானே! வெளிநாட்டிலிருந்து நம் நாட்டைச்சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவரைத்தொடர்பு கொள்கிறார்கள் என்பதும் சுவாரசியமான தகவல். சவாரி செய்யும் நேரத்தைக்கூட வீணாக்காமல் பயணிகள் படிப்பதற்கு என்று பல வார, மாத பல மொழிப்புத்தகங்களை வாங்கி அடுக்கியுள்ளார். ஆசிரியர்கள், அடிக்கடி சவாரி செய்யும் வாடிக்கையாளர் என்றால் சிறப்புச் சலுகைகளும் கொடுத்து மகிழ்விக்கிறார்.

சில ஷேர் ஆட்டோக்கள் பாதுகாப்பானவையாக இல்லை. அதிக இருக்கைகள் வேண்டும் என்பதற்காக பின்னால் இருக்கும் சிறுகாலி இடங்களில் நாற்காலி களைப் பயன்படுத்துகிறார்கள் , கதவைக்கயிறு வைத்துக் கட்டியிருக்கின்றார்கள் என்ற குறைகளையும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டால் நாங்கள் யாரையும் வற்புறுத்தி ஏற்றவில்லை. எவ்வளவு கூட்டமாய் இருந்தாலும் மக்கள் ஏறுகிறார்கள்...நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கை விரித்து விடுகிறார்கள்.

சொந்தமாக ஷேர் ஆட்டோ வண்டி ஓட்டுபவர்கள் குறைவு. பெரும்பாலும் ஷேர் ஆட்டோ வைத்திருப்போரிடம் வண்டியை வாங்கி ஓட்டிச் சவாரி எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தின வாடகை 300 ரூபாய், எரிபொருள் செலவு 200 ரூபாய் போக ஏதாவது மிஞ்சுகிறது. தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாகவே இருந்தாலும் திடீரென்று போடப்படும் காவல்துறை பணியாளர்களின் அபராதத்தையும் அவர்கள் கட்டித்தான் ஆகவேண்டும்.காலை 6 மணியிலிருந்து இரவு பத்துமணி வரை வண்டி ஓட்டும் ஓட்டுநர்கள் உணவு உண்பதற்கும், சற்று இளைப்பாறுவதற்கு மட்டுமே ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள் என்பது அவர்களது கடின உழைப்புக்குச் சான்றாகிறது.

ஒரு சிலர் பயணியைப்போல வண்டியை நிறுத்தி அவர்களிடம் இருக்கும் பணத்தைப்பிடிங்கிக் கொள்ளும் அவலமும் அரங்கேறத்தான் செய்கிறது. வண்டியில் சிலர் பயணிகளைப் போல் ஏறி சக பயணிகளிடம் ஏதாவது திருடுவதையும் தவிர்க்க வேண்டிய பொறுப்பு இவர்கள் தலையில் தான் விழுகிறது. ஏதேனும் பிரச்சனையென்றால் காவல்துறையிடம் இவர்கள் கொடுக்கும் புகார்களும் இவர்களைப் போலவே அலட்சியப்படுத்தப்படுகிறது.
ஷேர்ஆட்டோவில் ஏறி இறங்கினாலே 7 ரூபாய் கட்டணம் என்ற நிலையில் ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து , ஒரு சில நேரம் அதையும் கொடுக்காமல் செல்பவர்களையும் இவர்கள் சமாளிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

ஷேர்ஆட்டோ ஓட்டும் அனைத்து ஓட்டுநர்களும் பெரும்பாலும் தங்களுக்குள் சச்சரவு ஏற்படாமல் நட்புணர்வையேக் கொண்டிருப்பது பாராட்ட வேண்டிய விஷயமாகிறது. ஓர் பகுதியில் இருந்து மற்றப் பகுதிக்குச் சென்று பயணிகளை ஏற்றினாலும் அவர்களுக்குள்ளும் சில புரிதல்கள் இருக்கத்தான் செய்கிறது. அருகாமையில் உள்ள இலக்குகளுக்கும் சில பயணிகள் கட்டணக்கருவியை இயக்கச் சொல்வதையும் அவர்கள் கூறும் சட்டங்களையும் காது கொடுத்துக்கேட்கத்தான் வேண்டியிருக்கிறது. நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பலர்இவர்கள் வண்டியில் ஏறினாலும் அன்னப்பறவையாய் மாறி ஒவ்வொருத்தருக்கும் ஏற்றவாரு நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஷேர்ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது பெண்கள் மட்டும் கவனத்துடன் பயணப்பட வேண்டும் என்ற நிலைமை மாறி ஆண்களும் பத்திரமாகப் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது என்று நினைக்கயில் நடுக்கமாய்த்தான் இருக்கிறது. ஒரு சில இடங்களில் பத்து ரூபாய்க்கு நூறு ரூபாய் கொடுத்தால் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சில அருவருக்கத்தக்க லீலைகள் நடைபெறுவதாக கேள்விப்படும் பொழுது நம் வீட்டு இளைஞர்கள் பத்திரமாய்த்திரும்பி வர வேண்டும் என்று மனது பதறுகிறது.

எரிபொருள் சிக்கனம், விருப்பமான இடத்தில் இறங்கிக்கொள்ளலாம் , வாகன நெரிசலில் வெயிலில் வாடி பெருநகரத்தில் வண்டியோட்டும் சிரமம் இல்லை போன்ற பல நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கிறது. எல்லோர் மனதிலும் எளிதாய் இடம்பிடிக்கும் ஷேர்ஆட்டோவில் நாம் பகிர்ந்து கொள்வது சவாரிக்கானப் பணத்தை மட்டுமல்ல...நம் தேவைகளையும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் தான்.


இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே !



அதிகாலையில் எங்கு திரும்பி நடந்து சென்றாலும் ஏதோ ஒரு ஆன்மிகப் பாடலோ திரைஇசைப்பாடலோ,, செய்தியோ காதில் விழுந்து கொண்டே இருக்கிறதுமக்கள் பயணிக்கும் ஷேர்ஆட்டோக்கள் எனப்படும் மூன்று சக்கர வாகனங்களில் தொடங்கி பேருந்துமின்சார ரயில்மெட்ரோ ரயில்வாடகை நான்கு சக்கர வண்டி எனப் பயணம் செய்பவர் அனைவரும் காதில் கருவியை மாட்டிக் கொண்டு எதையோக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களேவீட்டு வேலை செய்யும் பொழுது கூட மகளிர் எதையோ இரசித்துக் கொண்டே தங்கள் வேலைப்பழுவை மறந்து உற்சாகமாய் வேலை செய்கிறார்களேஅலுவலகங்கள் தொழிற்சாலைகள் என்று நம் நகரைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பணிச்சுமையை மறந்து வேலை செய்ய பணியாளர்கள் எதை ஆறுதலாகவும் ஆர்வமாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்?

தாங்கள் அலைபேசியில் உள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களையா ? இருக்கலாம்...ஆனாலும் உலகநடப்புகளையும் , உணர்வுகளுக்கு ஆறுதல் அளிக்கும் பாடல்களையும், ஆர்வமூட்டும் வகையில் அள்ளித்தரும் வானொலிப்பண்பலைகளைக் காது கொடுத்துக் கேட்பதில் தான் எத்தனை ஆனந்தம் ? விருப்பமான தொகுப்பாளரின் கனீர் குரலைக் கேட்பதற்காகவே அதிகாலையில் அலுத்துக் கொள்ளாமல் ஆனந்தமாய் எழுந்திருப்பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். வர்ணனையாளரின் குரலுக்கும் , வானொலி தொகுப்பாளரின் பேச்சைக் கேட்பதற்காகவும் ஆசையுடன் வானொலிப்பெட்டியை நம் தாத்தா பாட்டிகள் அணைத்திருந்தார்கள். . நாம் அலைபேசியை அணைத்திருக்கிறோம் .... அவ்வளவுதான் வித்தியாசம்.

பணிசெய்யும் பொழுதே இடைஞ்சல் ஏற்படாமல் காதுகளில் மட்டும் கருத்துக்களை வாங்கிக் கொண்டு பணிபுரியும் வாய்ப்பு உள்ளதே , வேலை செய்யும் இடங்களில் மக்கள் வானொலியைக் கேட்க விரும்புவதற்கான காரணங்களில் ஒன்றாகிறது. ஆனால் படிக்கும் மாணவர்கள் வானொலிக்கேட்டுக் கொண்டேத் தங்களுக்கான வீட்டுப் பாடங்களைச் செய்யும் பொழுது, sandwich என்றழைக்கப்படும் ஈரொட்டிகள் போல நம் மூளையின் உள்ள மடிப்புகளில் கொஞ்சம் பாடல், கொஞ்சம் செய்தி, கொஞ்சம் படிப்பு என்று பதிந்து விடுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் தேர்வு அறைகளில் மாணவர்கள் தங்கள் பதிலளிக்க படித்தப் பாடங்களை நினைவூட்டுகையில், தங்கள் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த பொழுது கேட்ட பாடல்களும், செய்திகளும் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல முக்கியமானப் பணி செய்யும் அனைவருக்குமே பொருந்தும்.. இதனால் வேலை செய்பவர்கள் கவனச்சிதறல் வராமல் பார்த்துக் கொண்டு வானொலியின் பெயரைக் காப்பற்றலாம்..
தொழில்நுட்பம் சற்று வளரத்தொடங்கியிருந்த காலத்தில் அலைவீச்சுப் பண்பேற்றம் என அழைக்கப்படும் AMகளிலும் , அதிர்வெண் பண்பேற்றம் என்று அழைக்கப்படும் FM களிலும் மக்கள் அனைவரும் மயங்கித்தான் கிடந்தோம்.. இன்று எவ்வளவோ தொழில்நுட்ப அறிவியல் முன்னேற்றம் அடைந்தாலும் பரபரப்பான தூங்கா நகரங்களை தூங்கவிடாமல் இயக்கிக்கொண்டிருப்பதில் பெரும்பங்கு வகிப்பது நம் வானொலி நிலையங்கள் தான். தொலைக்காட்சி, , இணையம் என்று பற்பல வழிகளில் செய்திகளையும் , மனம் கவர்ந்த பாடல்களையும் கேட்கப் பல வாய்ப்பிருந்தாலும், . இந்த மந்திரப் பெட்டிக்குப் பலரும் மயங்கித்தான் கிடக்கின்றோம் .நெடுந்தூரப் பயணங்கள் , போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் பயணங்களின் பொழுது அலுப்பு ஏற்படாமல் பயணம் செய்யவும் , எந்தெந்த இடங்களில் நெரிசல் அதிகமாய் உள்ளது ? வேற்றுப்பாதைகள் என்னென்ன என்பதை நண்பனாய்க் கூறி வழிநடத்துவதும் இந்த வானொலித் தொகுப்பாளர்கள் தானே !

இளைஞர்களைக் கவரும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பொழுது கேலி, கிண்டல்கள் சற்று எல்லை மீறுவதாக புகார்கள் எழத்தான் செய்கின்றன. தனியார் வானொலி மையங்கள் சில நேரத்தில் ஒருதலைப்பட்சமாக ஒருபிரிவினருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதனால் நடுநிலைமை தவறி விடுகின்றனர் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். சுவாரசியமாக பேசுகின்றோம் என்று இரசிகர்களை கிண்டல் பேசும் தொகுப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள் . வானொலிப் பண்பலையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கும் இரசிகர்கள் சில நேரம் தனது மனம் கவர்ந்தத் தொகுப்பாளர்களால் காயப்படுத்தப்பட்டு விட்டதாகவும் வருத்தப்பட்டுக் கொள்கின்றனர் . தனியார் வானொலி நிலையங்கள் பல ஆர்வமூட்டும் நிகழ்ச்சியைக் கொடுத்தாலும் , அவர்களுக்கு இணையாக அரசு வானொலி நிலையங்களும் சில வரையறைகளோடு இயங்கி அவர்களுக்கு நிகராக போட்டிப்போடுகையில் அது ஆரோக்யமான போட்டியாகவே தோன்றுகிறது.

வானொலி தொகுப்பாளர்கள் மக்களைக்கவரும் வகையில் பேசுகின்றேன் என்று சில நேரம் உளறல்களுடன் இரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர். தமிழ் வானொலி நிலையம் தான்....ஆனால் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளின் விளையாட்டுத்தான் அதிகமாய் இருக்கிறது. கேட்டால் யதார்த்தமான உரையாடல்கள் என்று கண்சிமிட்டி மழுப்பிவிடுகிறார்கள். .ஒரு தொகுப்பாளரின் பேச்சைத் தினமும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் கேட்கும் பொழுது தினமும் பார்த்து பேசும் நண்பர்கள் போல் ஆகிவிடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் அவர் அந்த வானொலி நிலையத்திலிருந்து விலகிவிட்டாலோ, அந்த வானொலி நிலையமே மூடப்பட்டாலோ இரசிகர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்பது மிகப்படுத்தப்படாத உண்மைதான் . சில நேரம் இனிமையான பாடல்களையும், முக்கியமான செய்திகளையும் கேட்கலாம் என்று வானொலியை இயக்கினால் விளம்பரப்பதிவுகளை ஒலிபரப்பியே நம் பொறுமையைச் சோதித்து விடுகிறார்கள்

ஒரு தொகுப்பாளர் என்பவர் நடுநிலையோடு உணர்ச்சிவசப்படாமல் தெளிவாகத் தன் மொழியைப்பேச வேண்டும். ஆனால் சில தொகுப்பாளர்கள் பேசுவதைக்கேட்டால் நமக்கே மூச்சடைப்பு ஏற்பட்டு வாய் வலித்திடும் போல் இருக்கிறது. விளம்பரங்கள் , பாடல்கள் இவற்றின் இடம்பெறுதலுக்குப் பின்னையே நடுவில் தரப்படும் சில நிமிடங்களில் தாங்கள் கூறவிரும்பும் தகவல்களை அவர்கள் கூறவேண்டியிருப்பதால் வேகமாக பேசுவதாகத் தொகுப்பாளர்கள் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.. சில குறும்புக்கார இரசிகர்கள் தொலைபேசியில் கிண்டலுடன் வம்புப்பேச்சு பேசுகையில் , ஒரு சில தொகுப்பாளர்கள் வல்லவனுக்கு வல்லவனாக பதில் வாய்ஜாலம் காட்டிவிடுகின்றனர். ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டு விடுகிறார்கள்..

நாம் சோர்வான மனநிலையில் இருந்தாலும் , ஒரு சில தொகுப்பாளரின் பேச்சைக் கேட்கையில் நம் மனநிலையையே மாறி உற்சாகமாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.தன் நகைச்சுவைப் பேச்சு அம்புகளால் நம்மை சுழ்ந்திருக்கும் கவலைகளை சிதறவிடும் ஆற்றல் பெற்றவர்கள் இந்தத் தொகுப்பாளர்கள். . அடுப்படியில் அடைந்து கிடப்பவள் என்று ஏளனம் செய்யப்படும் பெண்களின் விரல்நுனியில் வண்ணங்களை மட்டும் காணச்செய்யாமல் அண்டத்தின் அன்றாட நிகழ்வுகளையும் அடைக்கும் ஆற்றல் பெற்றது வானொலி அலைவரிசைகள். என்றால் மிகையாகாது.. வானொலி நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் போட்டிகள் மக்களிடம் சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும், தங்கள் திறமைகளை வெளிகொண்டுவரும் ஆர்வத்தை மட்டும் ஏற்படுத்தாமல், சிறுசிறு பரிசுகளையும் வெல்ல வாய்ப்பளிப்பது சிறந்த விஷயம் . திரைப்படங்களுக்கான நுழைவுச்சீட்டு , ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு என்று அவர்கள் தரும் பரிசுகளில் பல வியாபார சூழ்ச்சிகளும் சந்தைப்படுத்துதலுக்கான தந்திரங்கள் நிறைந்திருந்தாலும் கடைக்கோடி மக்களுக்கும் மகிழ்ச்சிக் கிடைக்கிறது என்று தெரிகையில் பகலவன் கண்ட பனித்துளியாய் அந்த உள்ளீடுகள் அனைத்தும் மறைந்துப் போய்விடுகின்றன.

வானொலி நிலையத்திற்கு கடிதங்கள் வாயிலாக தங்க விருப்பப் பாடல்களையோ, தெரிந்தவர்களுக்குச் சுபதின வாழ்த்துக்கள் கூறும் முறை இப்பொழுது குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்களின் வழியே தெரிவிப்பதாக மாறி இருந்தாலும் , நம் பெயரை வானொலியில் கேட்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அள்ளித்தரும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. வானொலி நாடகங்கள் எனப்படுகின்ற நிகழ்ச்சிகளை அரசாங்க வானொலிகள் மட்டும் கைக்கொடுத்து மறைந்து போகாமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.. சமூக அவலங்களையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் நம் முந்திய சந்ததியினர்கள் வானொலி நாடகங்கள் வழியாக தெரிந்து கொண்டார்கள் என்றால் இப்பொழுது நாம் தொகுப்பாளர்களுடனான கலந்துரையாடல் , நம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் வழி புரிந்துகொள்கின்றோம்.

இப்பொழுதைய சுழ்நிலையில் வானொலி வழி காதுகளில் இன்பத்தேன் வந்துப்பாய்வது உண்மைதான்....ஆனால் குறைகள் என்று மக்களால் கருதப்படும் இரைச்சல்கள் குறைக்கப்பட்டால் சிறப்பாக தேன்சுவையை இரசிக்கலாம்.

Friday, June 23, 2017

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்.... இல்லை இல்லை நகரமும்



காலையில் எழுந்தவுடன் மணிச்சத்தமோ , விசில்சத்தமோ கேட்டவுடனேயே கண்களைக் கூடத்திறந்தும் திறக்காமலும் குப்பைத்தொட்டியைக் கொண்டு வெளியே வைக்கிறோம்.. குப்பை வண்டியைத் தள்ளிவரும் பணியாளர்கள் நாம் கொண்டு வரும் குப்பையைப் போடப் பல வண்ணங்களில் பெரிய தொட்டிகளைப் பிரித்து வைத்து இருப்பார்கள்.. குப்பைகளை  மக்கும் குப்பை, , மக்காத குப்பை என்று பிரித்துப், பணியாளர்கள் கொண்டு வரும் பெரிய தொட்டியில் போடும் சிறந்த மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்... நாம் நமக்குப் பிடித்த வண்ணத்தொட்டியில்  மொத்தமாக அனைத்துக் குப்பையையும் கொட்டிவிட்டு வந்துவிடுவோம். ஆனால் அதற்காகவா வண்ணத்தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். ? மக்கும் குப்பைகள் , மக்கா குப்பைகள் என்று குப்பைகளைச் சேகரிப்பதில் தான் எத்தனை வகைப்படுத்தியிருக்கிறார்கள் .

அப்படிப் பிரிக்கப்படும் மக்கும் குப்பையை உரமாக மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் எடுப்பதைத் தெரிந்து கொண்டால் அனைவரமே புருவம் உயர்த்துவார்கள்.....
துப்புறவுப் பணியாளர் தெளிவாய்ச் சொல்லுவார்...பிரித்துப்போடும்படி ...ஆனால் நமக்கெங்கே நேரம்...மொத்தமாய்க் கொட்டிவிட்டு வந்திடுவோம்.. இப்படி எல்லாக்குப்பையையும் ஒன்றாய்ப் போடுவதால் அவர்களுக்கும் பிரச்சனை நமக்கும் பிரச்சனை . நம் வளம்தரும் குப்பைகள் தான் வீணாய்ப் போகிறது . என்ன வளம் தரும் குப்பைகளா ? ஆம்..நம் வீட்டுக் குப்பையில் பெரும்பாலும் என்ன என்னப் பொருட்கள் இருந்துவிடப் போகிறது...பெரும்பாலும் காய்கறித் தோல்கள், அதன் சமையல் கழிவுகள், காகிதம் அதன் வகைச் சேர்ந்த அட்டைகள் , பெண்கள் உதிரப்போக்கு காலத்தில் பயன்படுத்திய சுகாதார துடைப்பான்கள் , குழந்தைகளின் கழிவுகளைத் தாங்கிய சுகாதார அரையாடைகள், , பிலாஸ்டிக் , துணி , டயர் ,தெர்மக்கோல் , கண்ணாடி, செருப்பு , நெகிழிப்பை என்றழைக்கப்படும் பாலித்தீன் பைகள்...

நம்மில் பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் பயனுள்ள காய்கறிச் செடிகள் வளர்க்கிறார்களோமோ இல்லையோ...அழகுக்காகப் பூச்செடியாவது வளர்ப்போம். . அப்படி உள்ள செடிகளுக்கு நம் வீட்டு மக்கும் குப்பையிலிருந்து மண்ணுடன் கலந்து தயாரிக்கப்பட்ட உரத்தை ஒருதடவைப் போட்டுத்தான் பார்ப்போமே...காய்கறிகளோ , பூக்களோ அதன் உற்பத்தியைப் பெருக்கி நம்மைப் பார்த்துக்கண் சிமிட்டிச் சிரிப்பது நிச்சயமாய் நடக்கும்.. மக்கும் குப்பைகளில் உள்ள நுன்னுயிர்கள் வளரும் செடிகளுக்கு நிறைய நன்மைகளைத்தரும்.  அதுவே நாம் அக்குப்பைகளை நெருப்பு மூட்டி விட்டோமானால் அந்நுன்னுயிர்கள் இறந்து பயனற்றுப் போய்விடும்..

சமையலறைக்கு என்ற தனியாக ஒரு குப்பைத் தொட்டியை வைப்பதில் நமக்குப் பெரிய கஷ்டம் எதுவுமில்லை.. வீட்டுற்கு வண்ணம் பூச உபயோகித்த வாளியைக்கூட பல வீடுகளில் குப்பைத் தொட்டிகளாக உபயோகித்துக்கொள்கிறார்கள் . சமையலறைக் கழிவுகள் பெரும்பாலும் மக்கும் குப்பைகளாய்த்தான் இருக்கும் .விதைகள் , கொட்டைகளை வைத்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும்படி விதைப் பந்துத் தயாரிக்கவும் சொல்லிக்கொடுக்கலாம்..

விதைப்பந்தா ...அது என்ன என்று யோசிக்கிறீர்களா ? ...மண்கலந்த உரத்துடன் சிறுதானியங்களையும் சேர்த்து நமக்கு விருப்பமான மரங்களின் கொட்டைகளை உள்ளே வைத்து மூடிவிடலாம்...பின் நெருக்கமான நகரைவிட்டு வெளியே ஊருக்கு ஒதுக்குப் புறமாகச் செல்லும் பொழுது நம் குழந்தைகளுடன் உற்சாகமாக அந்த விதைப்பந்துகளை  எல்லா இடத்திலும் எரிந்து காடுகள் உருவாகக் காரணமாக அமையலாம்.. விதையாகவோ கொட்டையாகவோ எறிந்தோமானால் சிதைவதற்கு அதிக வாய்ப்புள்ளது அல்லவா ? அதுவே இப்பந்தாக எறிந்தோமானால் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தும் தக்க சீதோஷ்ண நிலையை வைத்தும் சுற்றுப்புறத்திற்கு ஏதுவாக அதுவே வளர்ந்து கொள்ளும்...

நம் வேலைபார்க்கும் இடத்தில் பெண்கள் உதிரப்போக்கு காலத்தில் பயன்படுத்திய சுகாதார துடைப்பான்கள் , குழந்தைகளின் கழிவுகளைத் தாங்கிய சுகாதார அரையாடைகள் அப்படியே கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால் நம்மால் வேலைசெய்ய முடியுமா? முடியாதல்லவா...எப்படி முகத்தைச் சுழிப்போம் ?அதுபோலத்தானே நம் துப்புறவுத் தொழிலாளர் நண்பர்களுக்கும் இருக்கும்... வீட்டில் எத்தனையோ பழைய செய்தித்தாள்களை , இதழ்களை விலைக்குப் போடுகிறோம்..அதில் கொஞ்சத்தை எடுத்து இது போன்ற சுகாதார துடைப்பான்கள் மற்றும் அரையாடைகளைச் சுற்றிக்குப்பையில் போட்டுவிடுவதற்கு நமக்கு சில நிமடங்கள் தான் ஆகும்...அதில் சிகப்பு நிறக்குறீயிடு செய்து விட்டோமென்றால் ரொம்ப நல்லது. அவர்களுக்கும் அதைத் திறந்துப்பார்க்கும் அவலநிலை ஏற்படாது .

நாம் நிரப்பிய குப்பையைத் திரும்பவும் பிரித்துப் பார்க்க நாமே முகம் சுளித்துக்கொள்வோம். . ஆனால் அருவருப்புடன் நாம் போடும் , அல்லத்தூக்கி எறியும் குப்பையைப்  பொறுமையாய்ப் பிரித்து , அதனை மக்கும் குப்பை , மக்கா குப்பை என பிரிக்கும் துப்புரவுத் தொழிலாளர்களிடம் சிநேகப்பார்வையாவது  வீசினால் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்...... நாம் குப்பையைப் பிரித்துப் போடாவிட்டால் , கையுறையில்லை என்றாலும் அவர்கள் அதனைப்பிரித்து விடுவார்கள்.. கொடுக்கப்படும் கையுறைகள் கிழிந்து விடுகிறது அல்ல வசதியாய் இல்லை என்ற பல காரணங்களால் அரசாங்கம் எப்பொழுதாவது தரும் கையுறைகளையும் அவர்களால் உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுகிறது .

நம் குடும்பத்தினர் உபயோகித்த கழிவறையைக் கழுவுவதற்கும் , வீட்டுக்குப்பையைப் பொதுக்குப்பைத் தொட்டியில் போடுவதற்கே நாம் நம் முகத்தை அஷ்டக்கோணலாகச் சுழித்துக் கொள்கிறோம் . அந்தப் பணிகளைச் செய்து வந்துவிட்டு கைகளை நன்றாகக் கழுவி விடுகிறோம் ஆனால் இந்தத் துப்புறவுப் பணியாளர்களுக்குத்தான்  எத்தனை சகிப்புத்தன்மை...நம் குழந்தையின் கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கே நாம் அருவருப்பு படுகையில் , கையுறைக் கூட இல்லாத தற்காலிகத் துப்பறவுத் தொழிலாளர்களின் பணிகளைப் பாராட்டியே ஆகவேண்டும். . இவர்களுக்கென்று நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் பெரும்பாலும் கண்துடைப்பாகவே இருக்கின்றன எனும் இவர்களின் கூக்குரல்கள் ஈனசுவரத்திலேயே அரசாங்கத்தின் காதுகளில் விழுகிறது . மருத்துவக் காப்பீட்டு அட்டையும் பெரிய அளவில் ஏற்படும்......குறிப்பாக இதய நோய் ,சீறுநீரக நோய் போன்ற  பெரிய அறுவை சிகிச்சை நோய்கள் ஏற்பட்டால் மட்டுமே உபயோகப்படுகிறது. . தினமும் குப்பைகளுக்கு நடுவே வேலைப்பார்க்கும் இவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் , தலைவலி, போன்ற நோய்களுக்கு இவர்கள் தான் செலவு செய்து மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தால் அந்த நோய்கள் கூட இவர்களை அண்டாது ஓடிவிடும் .

நம் தெருக்களில் ஏதேனும் பாதாளச்சாக்கடை அடைத்து விட்டால் வழிந்தோடும் கழிவுநீரை மிதித்து அதைத் தாண்டிச் செல்லவே நாம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து, அரசாங்கத்தை க்
குறை சொல்லுவோம்.. ஆனால் உண்மையில் அரசாங்க சார்பில் வேலை செய்பவர்கள் இந்த உயர்ந்த மனிதர்கள் தான். நாற்றம் என்று நாம் மூக்கைப் பொத்துகையில் மதுவருந்திவிட்டு  அந்த துர்நாற்றத்தை மறந்து சாக்கடைக்குள் செல்பவருக்கு நாம் கொடுப்பது அருவருப்பான பார்வை மட்டுமே . இதனால் தேவையில்லாத மதுப்பழக்கத்திற்கும் ஆளாகி விடுகிறார்கள்.. பண்டிகைக் காலங்களில் அவர்கள் நம்மிடம் பரிசு எதிர்பார்க்க நாம் தருவதோ அலட்சியப் பார்வைகள் தான். நமது சுகாதாரத்திற்காக தன் சுகாதாரத்தைக் கூடக்கவலைப்படாமல் அதிகப்பட்சம் 7 மணிநேரம் இடைவிடாது எல்லா காலநிலையிலும் உழைக்கும் ஊழியர்களுக்கு சிறிய ஊக்குத்தொகையை தருவதால் நிச்சயமாய்  நாம் குறைந்து விட மாட்டோம்....எவ்வளவோ செலவழிக்கின்றோம் ...நம் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் இவர்களுக்கு இதைக்கூடவா செய்ய மாட்டோம்...இலட்ச ரூபாய் கொடுத்தாலும் நாம் இந்த துப்புறவு வேலையைச் செய்வோமா ? நிச்சயம் செய்ய மாட்டோம்..

அரசாங்கத்தில் தான் இவர்களுக்குச் சம்பளம் தருகிறார்களே ? அது போக பல வருடப்பழக்கம்  காரணமாக சிலர் வீட்டில் தனியாகவும் அவர்களது சொந்தப்பணிகளைச்  செய்து சம்பாதிக்கவும் செய்கிறார்களே. என்று சிலர் கேட்கலாம் . பணம் அவர்களது கணக்கில் அரசாங்கத்தால் நிச்சயம் போடப்படும் . ஆனால் காலதாமதமாகப் போடப்படும் வாய்ப்புகள் அதிகம் . பணிநிறைவு ஆனபின்
கொடுக்கப்படும் தொகைகூட அவர்களைச் சென்றடைய பல மாதங்கள் ...ஏன் போதாத காலம் என்றால் சில வருடங்கள் கூட ஆகலாம்.. அதுவரைத் தங்கள் குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்....வட்டிக்குக் கடன் வாங்குவார்கள்.....பின்னர் பணம் வந்து  அசல்கடனைக்கட்டினாலும்  வட்டியையும் இவர்கள் தானே கட்ட வேண்டும் .

நெகிழிப்பை என்றழைக்கப்படும் பாலித்தின் பைகள் கட்டணம் என்றாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் காசுக்கொடுத்து வாங்கி விடுகிறோம்.. திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் இப்பொழுது அழகஅழகானப் பைகளை அன்பளிப்பாய்த் தருகிறார்கள்.. அதையெல்லாம் எப்படி உபயோகிக்கலாம் ? இப்படித்தான் கடைகளுக்குச் செல்லும் பொழுது விதவிதமான துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம்.... அந்தப் துணிப்பைகளுக்குள் பல துணிப்பைகளை வைத்து வகையான காய்கறிகள் வாங்கும் பொழுது பிரித்தே வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்திடலாம்.... வீட்டுக்கு வந்து பிரிக்கும் அவசியம் இல்லாமல் போகுமே...

மஞ்சள்பையின் மகிமை தெரியாமல் அதனை அவமானமாக எண்ணி நெகிழிப்பை
என்றழைக்கப்படும் பாலித்தின் பைகளை உபயோகிப்பதால் 200 முதல் 1000 ஆண்டுகள் வரை நம்மண்ணை மலடாக்குவதோடு,, விலங்குகள் அதைத் தின்று உயிர்விடுவதற்கும்  காரணமாகி நம் வருங்கால சந்ததியினருக்குப் பெரிய துரோகத்தைச் செய்கிறோம்.. நெகிழிப்பை என்றழைக்கப்படும் பாலித்தின் பைகளை தெருவில் சாலை அமைப்பதற்குப் பயன்படுத்தும் புது தொழில்நுட்பத்தையும் நம் இளைஞர்கள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.. உறுதியான பாதையை வாகனத்துக்கு மட்டுமல்லாது நம் வருங்கால சந்ததியனருக்கும் அமைத்துத்தந்திருக்கிறார்கள்  நம் நாட்டின் வருங்காலத்தூண்கள்.....பொது இடங்களில் குப்பையைப் போடுகிறவர்களை விட குப்பையைச் சுத்தம் செய்பவர்களை மதித்தால் நாமும் நலம் பெறலாம்...இந்த நாடும் நலம் பெறும்...

Tuesday, June 20, 2017

அப்பா

மனைவியைப் பிரிந்து
மனைக்காக்கப் பறந்து சென்றாய்
தேடித் திரிந்து
கொண்டு வந்த பொருள்
அனைத்தும் 
பெற்ற குஞ்சுகளுக்கே
பகிர்ந்தளித்தாய்

தனிமை உனக்கு
ஏற்றம் தந்தாலும்
ஏகாந்தம் தந்த
ஏக்கத்தை 
நான் அறிவேன்!

இல்லாளின் இன்முகம் மறந்து 
இல்லற இன்பம் இழந்து 
இணையில்லா வலியை
மனதில் பொதித்து
வைத்தாய்

கடல் கடந்து சென்றாய்
அந்நிய நாட்டில் 
அன்னத்தையும்
சிக்கனமாய் செலவழித்து
என்னை
சொந்த நாட்டில் 
சொர்க்க வாழ்க்கை
வாழச்செய்தாய்!

உழைத்தாய்
உழைக்கின்றாய்
உழைப்பாய்
ஆசிர்வதிக்கப்பட்டவன் நானப்பா

தந்தை மகற்காற்றும் 
உதவியை செய்துவிட்டாய்
போதும்....கைமாறு செய்யவிடு
மகன் தந்தைக்காற்றும்
உதவிக்கு இப்பிறவி போதாதே 
அடுத்த பிறவியில் 
வாய்ப்புக்கொடு
அப்பனாக நானிருக்கேன்
நன்றிக்கடன் கொஞ்சம் 
தீர்த்துக் கொள்கிறேன்......

டி.ஸ்.டி. ராஜா

தராசு பிடித்த கைகள்...
ஓர் சமூகத்தை மட்டுமல்லாது
சமுதாயத்தின்
வாழ்க்கைத் தரத்தையும்
உயர்த்த உதவிய
உயர்ந்த எண்ணங்கள்!

வனிதையின் கல்வி
வளர்ச்சிக்கு
வகைவகையாய் பயிற்சி
சிலிர்க்க வைக்கிறது
சிறுதொகையைக் 
கட்டணமாய் பெற்று
நீங்கள் எடுத்த முயற்சி!

சுகாதார வசதிக்கு
வித்திட்டு தாயுமானவர்...
தற்காப்புக்கலையை
கற்பித்து தந்தையுமானவர்

சிறகுகள் பெற்று
சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்கும்
பறவைகளாய் நாங்கள்!
என்றும் நன்றியுடன்
எங்கள் நெஞ்சில் 
நீங்காத நினைவில் 
நீங்கள்!

புள்ளிகளும் கோலங்களும்...

மார்கழி மாதம்
அவளுக்கும் பிடிக்கும்
எனக்கும் பிடிக்கும்...
வைகறையில்  பொழுது
புலர்கையில்
புலம்பாமல் எழுந்திடுவேன்
பாவை இவளுடன் நேரம்
கழித்திடவே!  

கம்பிக்கோலம் போடுவாள்
நான் கிறுகிறுத்து விழுவேன்
எத்தனை  நெளிவுகள்?
எத்தனை சுளிவுகள்?
வாழ்க்கைப்பாடம் கற்றுத்தரும்
வாத்தியாரும் இவள்தானோ ?
வண்ணக்கோலங்கள் அழகா 
அதை வரைந்து
இரசிக்கும் இவள்
நிலவுமுகம் அழகா? 

பனி கொட்டுகிறது
பாசமாய்ச் சொல்லுவாய்
வெளியில் நிற்காதே என்று!
கோலம்போட ஆசை என்றேன்
கைப்பிடித்து வரையச் 
சொல்லிக் கொடுத்தாய்
நானோ  உன்வாசம் 
நுகர்ந்து கிறங்கிக் கிடந்தேன்

ரங்கோலி போட்டுக்
கட்டாந்தரைக்
கோலத்தில் மட்டுமா 
வண்ணம் தூவினாய்?
என் வெறுமை வாழ்க்கையிலும்
நிறங்கள் தடவிச் செல்லும் 
வண்ணப் பண்டிகை ஆனாய்!

தேடுகிறேன்
அந்த நாட்களையும்
அதிகாலைகளையும்
அயராது நீ பயிற்சி 
செய்த கோலப்புத்தகத்தையும்
இரசிக்கிறேன்
தரையில் ஒட்டிய கோலங்களை அல்ல
நெஞ்சில் நின்ற காலங்களை அம்மா!