Thursday, May 25, 2017

மாய உலகில் தொலைந்திட்டோம்...

அனல் வெப்பத்தைச் சமாளிக்க அமீரத்தில் எல்லா இடங்களிலுமே குளிர்சாதன வசதியைச் செய்து இருப்பார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். ஏப்ரலில் ஆரம்பிக்கும் வெயிலின் உக்கிரம் நவம்பரில் தான் சற்று தனிந்து தானும் இளைப்பாறி நம்மையும் இளைப்பாற வைக்கும். நவம்பரில் இருந்து மார்ச் வரை நல்ல சீதோஷ்ணநிலை இருக்கும் என்பதனால் சுற்றுலாக் காலம் கொண்டாட்டமாய் துவங்கிவிடும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உலக நாடுகளில் இருந்து பலரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.


அதற்காகவே பல நிகழ்ச்சிகளையும் பொழுதுபோக்கு ஏற்பாடுகளையும் அரசே செய்தும் தருவார்கள். உலகத்திலிருந்து பல கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமையின் வெளிப்பாட்டைக் கொண்டு சுற்றுலாப்பயணிகளை வியக்கச் செய்வார்கள். தரையில் ஓவியங்கள் வரைந்திருந்தாலே அசையாமல் நின்று ஐந்து நிமிடமாவது அதன் அழகை ரசிப்பேன். அப்படி பட்ட எனக்கு முப்பரிணாம முறையில் நீண்ட ஜூமைராத்தெருவில் உலகத்தில் உள்ள பிரபல ஓவியர்களைக் கொண்டு வரையப்பட்டிருந்த எண்ணற்ற ஓவியங்களைப் பார்த்து இரசிக்க இருகண்கள் போதவில்லை.


வழிநெடுகிலும் ஓவியங்களை வரைந்து தரையில் ஒட்டியிருந்தார்கள். சுவற்றில் ஒட்டியிருந்த ஓவியங்கள் பல நாட்களானாலும் அப்படியே இருந்தன. dubai canvas festival எனப்படும் சித்திரப்படம் சார்ந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு ஒளிப்படப் போட்டியும் நடைபெறும். ஒருசில ஓவியங்களின் அருகிலேயே இந்த இடத்தில் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த இடத்தில் நிற்கும் பொழுது தான் ஓவியம் போல் அல்லாமல் உண்மை போல் தத்ரூபமாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.


அதனருகிலேயே அந்த சித்திரத்தை வரைந்தவர்களின் விவரங்களையும் குறிப்பிட்டிருப்பார்கள். மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தால் வரிசையில் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.
அங்கேயே பல உணவு விடுதிகள் இருந்தாலும் விலைப்பட்டியலைப் பார்த்தவுடன் பசியெல்லாம் பறந்து ஓடிவிடும்.பாதாளத்தில் விழுவது போன்று , ஒட்டகச்சிவிஞ்கிக்குப் புல் கொடுப்பது போன்று என்று பல ஒளிப்படங்கள் எடுத்து அலுத்துவிடுவோம். ஒவ்வொரு தனிபாங்குடன் ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஏற்றவாறு நிற்க உட்கார என்று கைகளும் நோகும், கால்களும் நோகும். ஒளிப்படம் எடுப்பவருக்கும் அதே நிலைமை தான். கை கால்வலியுடன் அலைபேசியின் நினைவுத்திறமும் நிரம்பி வழிந்துவிடும்.


இதே போன்று கராமாவில் உள்ள அரசுக்கட்டிடத்திலும் பல ஓவியங்களைப்படைத்திருந்தார்கள். இரவு நேரத்தில் வண்டியில் பயணம் செய்து கொண்டே நண்பர்களுடன் சாலையின் இருபுறங்களிலும் ஓவியங்களை இரசித்தது மறக்கமுடியாத ஒன்று.


street art festival என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தெரு நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், ஓவியம், உணவு, வித்தாயாச ஒப்பனையடன் வரும் கலைஞர்கள் என அனைத்துமே அடங்கும்.
ஜுமைரா கடற்கரையில் சில காலங்களில் இலவசமாக திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள்.


நல்ல சொகுசு மெத்தை நாற்காலிகள் எல்லாம் போட்டுக்கொடுப்பார்கள். நாம் நன்றாய் படுத்துக்கொண்டும் பிரசித்திப் பெற்ற திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டியது மட்டுந்தான் வேலை. அதே கடற்கரையில் அமர்ந்து வித்தியாசமான வண்ண வண்ண வான வேடிக்கைகளையும் பார்க்கும் வாயப்பு கிடைக்கும். சுமார் 5 நிமிட தொடர் வானவேடிக்கைக்காக இரண்டு மணிநேரத்தைப் பயணத்தில் செலவழிப்போர்களுள் நாங்களும் ஒரு குடும்பம். வான வேடிக்கையில் என்ன கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்ட என்று கூறிச் சென்றாலும் பெரியோர்களுக்கும் அந்தத் தொடர் வான வேடிக்கையைப் பார்க்கக் குதூகலம் தொற்றிக்கொள்ளும். எந்த வண்ணப் பட்டாசைப் பார்ப்பது என்ற குழப்பம் நிச்சயமாய் வரும்.


நண்பர்கள் குடும்பத்துடன் சென்றோமானால் 'இங்கே பார் அங்கே பார் ' என்று கூச்சல் கேட்க எந்த வானவேடிக்கையைப் பார்க்க என்றே தெரியாமல் தவித்துவிடுவோம். வானில் வெடிக்கும் பட்டாசுகள் நம் மேலே விழுந்துவிடும் என்று என்னும் அளவுக்கு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் அந்த குறும்புக்கார வானவேடிக்கைகள். என் குழந்தை பட்டாசுகளைப் பட்டாபூச்சியாய் இரசிப்பாள் என்று நினைத்தால் புலிக்குப் பயந்தப் பூனைகுட்டியாய் மாறி அழ ஆரம்பித்துவிட்டாள். பட்டாசு நம் மேல் விழுந்துவிடுமோ என்று பெரியோர்களே பயப்பட , பாவம் சிறுபிள்ளை அவள் பயப்படுவதைக் குறைகூற முடியாது. ஜுமைராக்கடற்கரையிலிருந்து இரவு நேரத்தில் ஒளிவீசும் நட்சத்திர விடுதியுமான அட்லான்டிசையும் பார்க்க முடியும். 

இந்த ஜுமைரா வான வேடிக்கையை இரசிப்பதற்காகவே விடுமுறை நாட்களில் பெருநகர ஊர்தி( metro) , அமிழ்தண்டவாள ஊர்தி( tram) என்று பயணப்பட்டு நண்பர்கள் குடும்பத்துடன் பயணிப்பதும் கொண்டாட்டந்தான். 

பேருந்து நிறுத்தங்கள், கழிப்பறைகள் உட்பட அமீரகத்தில் எல்லா இடங்களுமே குளிரூட்டப்பட்டிருக்கும். ஒரு சில வீடுகளில் அந்தெந்த அறைகளுக்கு மட்டும் குளிர்சாதன வசதி செய்து இருப்பார்கள். சில வீடுகள் மொத்தமாய் வீடு முழுவதுமே குளீரூட்டப்பட்டிருக்கும். சில அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாய் ஓரிடத்தில் குளிர்சாதனத்திற்காகவும், சமையல் எரிவாயுக்காகவும் நிறைய எந்திரங்களை ஏற்பாடு செய்து நிறுவியிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குளிர் , எரிபொருளின் அளவை கூட்டக் குறைக்க கருவியையும் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருப்பார்கள்.

குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு ஏற்ப நீச்சல்குளங்கள், பூங்கா, உடற்பயிற்சி மையங்களுக்கு அனுமதி தந்திருந்தார்கள். அடிக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்திலிருந்தே குளிர்சாதனப் பெட்டிகளின் திறனை ஆய்வு செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் என்று அடிக்கடி பணியாளர்களை அனுப்பி வைப்பார்கள். அப்படி வரும் பணியாளர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருப்பார்கள். எப்பொழுதாவது பிலிப்போனப் பணியாளர்கள் அவர்களுடன் வருவார்கள்.வீட்டில் தனியே இருக்கும் எனக்கு யாரேனும் பணியாளர்கள் பணிநிமித்தமாக வந்து விட்டார்கள் என்றால் மிகுந்த கொண்டாட்டம் ஆகிவிடும். பணியாளர்கள் சிறு வயது இளைஞர்களாய் இருப்பதனால் அக்கா அக்கா என்று பாசத்துடன் அழைப்பார்கள்.'பிரிவோம் சந்திப்போம் ' என்ற படத்தில் வரும் சிநேகாவைப் போல மாறிவிடுவேன். 

வந்தவர்களுக்கு ஏதேனும் குளிர்பானம் அல்லது தின்பண்டங்கள் கொடுப்பதற்கு குதித்து ஓடுவேன். ஒருமுறை அப்படி வந்திருந்த பையன் தன் திருமணப்பத்திரிக்கையை எங்களுக்குத் தர நாங்கள் நெகிழ்ந்து விட்டோம். அந்த வார விடுமுறையிலேயே அப்பையனை அழைத்து அசைவ விருந்தளித்து ஆனந்தப்பட்டுக் கொண்டோம்.
ஒவ்வொரு வாரமும் இந்த வாரவிடுமுறையை எவ்வாறு எங்கு செலவழிக்கலாம் என்று கணவர் பார்த்துச் சொல்லி விடுவார். நண்பர்கள் அனைவரும் பகிரியில் ஒரு குழுவில் இருந்ததால் ஒத்தக்கருத்துடன் ஒரு முடிவை எடுத்துப் பயணப்படுவோம்.அமீரகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளை அன்றாடம் ஒர் பகிரிக்குழுவில் பகிர்வார்கள். 

ஆன்மீகம், கலை என்று பகிரப்படும தகவல்களுக்குப் பஞ்சமே இல்லை. நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நாம் அமீரகத்தில் இருக்கிறோமா அல்ல இந்தியாவில் இருக்கிறோமா என்று நிச்சயம் நமக்கே குழப்பம் ஏற்பட்டுவிடும். நவராத்திரி போன்ற பண்டிகையென்றால் கொலு வைக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். தமிழ் வானொலிப் பண்பலைகளில் நடத்தப்படும் கொலுப் போட்டிகள் பிரமிப்பை ஏற்படுத்தும்.தங்களது வீட்டுக் கொலுக்களைச் சிறப்பாக அலங்கரித்து ஒளிப்படம் எடுத்து வானொலிப் பண்பலைக்கு இணையத்தில் அனுப்பி வைப்பார்கள்.

சிறப்பாக கொலு நடத்திய வீடுகளுக்குச் செல்லும் வானொலி தொகுப்பாளர்கள் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப் படுத்துவார்கள். ஒருமுறை எனது பள்ளிக் கணினி ஆசிரியர் அவரது தோழிகள் தெரிந்தவர்கள் என்று அனைவரின் வீட்டுக் கொலுக்களையும் ஒளிப்படம் எடுத்து தமிழ்நாட்டிலிருந்த பள்ளி இசை ஆசிரியருக்கு பகிரியில் அனுப்பிவைத்தார்." அமீரகம் என்றால் பாலைவனம் என்று எண்ணியிருந்தேன்...இதென்ன... தமிழ்நாட்டை விட கோலாகலமாக கொலு கொண்டாடப்படுகிறது" என்று செல்லமாகப் பொறாமைப்பட்டார் இசை ஆசிரியுர் .விரதங்கள், ஆன்மிக பூஜைகள், ஹோமங்கள் என அனைத்துமே செய்வதற்குப் புரோகிதர்களும் கிடைப்பார்கள்.

பல வருடங்களாக துபாயில் இருப்பவர்கள் என்றால் சகல வசதிகளுடன் வீட்டை முறையாய் பராமரித்து தேவையான அனைத்தையும் வீட்டில் வைத்திருப்பார்கள். வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆளும் கிடைப்பார்கள். அபுதாபியில் இருந்த தோழி தனிமையைப் போக்குவதற்காகவே வீட்டு வேலை செய்ய ஒரு பெண்ணை பணியில் அமர்த்தியிருந்தாள்.


IKEA என்றழைக்கப்படும் உலகப் பிரசித்திப் பெற்ற கடை துபாயில் festival city mall என்றழைக்கப்படும் பேரங்காடியில் அமைந்திருக்கும். இங்கு கிடைக்காத வீட்டுக்குத் தேவையான பொருட்களே இல்லை எனக்கூறலாம்.முதலில் இங்கு என்ன இருக்கும் என்று நினைத்துச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சிக் காத்திருந்தது. ஆங்கிலப் படங்களில் பார்ப்பது போல் இருந்தது அந்தப் பிரம்மாணடக் கடையின் சேமிப்புக்கிடங்கு. பல அடுக்குகளில், பல தளங்களில் எல்லா வகையான கட்டில், அலமாரிகள் என்றனைத்தையும் அங்கே தான் அடுக்கி வைத்திருந்தார்கள். 

home centre என்றழைக்கப்படும் இதுபோன்ற பெரிய கடையும் அமீரகப் பேரங்காடியில் தான் இருந்தது. இங்கிருந்து தரமான பொருட்களை வாங்கி இந்தியாவுக்கு எடுத்துச் சென்று தங்கள் சொந்த வீடுகளை அழகாக அலங்கரித்த மனிதர்களையும் எனக்கு நன்றாகத் தெரியும். அலுவலகத்திலிருந்து, அங்கு வேலை செய்த மக்களுக்கு என்று கப்பலில் சில கிலோ எடைகளைக் கொண்டு செல்லலாம் என்று சலுகை அளிப்பார்கள். அப்பொழுது இதுபோன்ற தரமான வீட்டு சாமான்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள்.

சுற்றுலாவுக்கு வருகை தந்திருந்த அப்பாவின் அக்காவைப் பல பீடிகையுடன் இந்தப் பெரிய கடைக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். முதலில் நான் கொடுத்த முன்னுரையைப் பார்த்து அப்படி என்னதான் இருக்கும்...கண்டிப்பாகச் செல்லவேண்டுமா?" என்று சற்றுக் குறைவாய் எண்ணியே உள்ளே நுழைந்திருக்கிறார். 
பின்பு கடையை முழுதாக பார்த்தபின் நல்லவேலை இக்கடைக்கு கூட்டி வந்தாய். இல்லையென்றால் இவ்வளவு அழகான 
வகைவகையான வீட்டுசாமான்களுக்கான பிரத்யேகக்
 கடையைப் பார்க்காமலே போயிருப்பேன் என்று கூறி என்னைக்கட்டி அணைத்துக்கொண்டார். 


அப்படி என்ன இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? படுக்கையறை, சமையலறை, குளியலறை என்றால் எத்தனை வகையாக இருக்கலாம் என்று காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அழகாக அடுக்கியிருப்பார்கள்.விலை அதிகம் என்றாலும் தரம் அதிகம் என்பதால் கூட்டம் அலைமோதும். சில சலுகை விலைகள் கொடுக்கப்படும் பொழுது மக்கள் கிடைத்தப்பொருட்களை வாங்கிக் குவித்துச் செல்வார்கள். 


திரைப்படங்கள் , பணக்கார வீடுகள், நட்சத்திர விடுதிகளில் பார்த்து வியந்த பொருட்களையும் அறைகளையும் தொட்டுப்பார்க்கவும், உட்கார்ந்து உணரவும் வாய்ப்புகிடைத்தால் வேண்டாமென்றா சொல்வோம்? காட்சிக்கு வைத்திருந்த அறைகளைப் பார்வையிடும் பொழுதுதான் இரண்டு சமையலறைகள் ஒட்டினார்போல் ஒரு தடுப்புக் கொண்டு அமைந்து இருப்பதை கவனித்தேன். ஒரு வீட்டில் ஒட்டினார்போல் எதற்கடா இரண்டு சமையலறை என்ற எனது கேள்வியைப் புரிந்துகொண்டார் அத்தை. பெரிய பணக்காரர்களின் வீட்டில் இது போன்று இரண்டு சமையலறை உண்டு என்று தான் பார்த்த பிரபலங்களின் வீடுகளை ஞாபகப்படுத்திப் பகிர்ந்து கொண்டார்.

சற்றுப் பெரியதாய் இருக்கும் சமையலறையில் பணியாளர்கள் வேலைசெய்வார்கள் என்றும் சிறிய சமையலறையில் அந்த வீட்டுப் பெண்களோ, நபர்களோ பிரத்யேகமாக சமைத்துக் கொள்வார்கள் என்று விளக்கி என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார். சிறுவர்களுக்கான அடுக்குப் படுக்கைகளைப் பார்த்தால் நமக்கே ஆசையாய் இருக்கும். அத்தைக்கும் அடுக்குப்படுக்கைகளின் மீது தீராத ஆசையிருந்ததால் விதவிதமான பல அடுக்குப்படுக்கைகளை பல ஒளிப்படங்கள் எடுத்து திருப்தி அடைந்து கொண்டார். வெள்ளை நிறத்தில் சமையலறை அழகாய் கண்களைப் பறிப்பதாய் என் அம்மா கூறினார். சமையலே செய்யாமல் இருந்தால் நம் வீட்டு சமையலறையும் அழகாய்தான் இருக்கும் என்று கூறி கண்ணடித்தேன். இங்கு வாங்கிய கத்திகளை ஊரில் உபயோகித்து பார்த்த அண்ணி அடுத்தமுறை சில கத்திகளை வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார் என்பது தனிக்கதை.


துபாயிலிருந்து அஜ்மானிற்குச் செல்ல அதிகபட்சம் முக்கால் மணிநேரம் ஆகும். ஒரு வாரவிடுமுறையில் திடீரென்று சுஜிசதீஷ் தம்பதியினர் காலை உணவை நாங்கள் செய்து எடுத்து வருகிறோம். வாங்க நம்மெல்லாம் காலையில் ஒரு கடற்கரைக்குச் சென்று நேரத்தை இனிமையாக கழித்துவிட்டு வரலாம் என்றார். வைட்டமின் vitamin D என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு துபாயில் பலருக்கும் இருக்கும்.அதனால் அங்குள்ள மருத்துவர்கள் எல்லாருக்கும் காலை இளவெயிலில் நிற்குமாறு பரிந்துரைத்துவிடுவார்கள். அதனால் வாரவிடுமுறைகளின் காலை வேளைகளிலும் கடற்கரைகள் கணிசமான கூட்டத்துடனேயேக் காணப்படும். 

துபாயில் ஏதேனும் கடற்கரைக்குச் செல்வோம் என்று நினைத்தால் அமீரகத்தில் பார்க்காத நாடான அஜ்மானைப் பார்த்துவிட்டு வரலாம் என்று திடீர் முடிவு செய்யப்பட்டு வண்டி திசை திரும்பியது. அஜ்மான் என்றவுடனே எனக்கு முதன்முதலில் பத்திரிக்கை ஊடகத்தில் அறிமுகமான நண்பர் , மனதைக்கவர்ந்த வானொலிப் பண்பலைப் பெண் தொகுப்பாளர் , துபாய் தமிழ் இலக்கிய கூட்டமை ப்பின் முக்கிய நண்பர் என்று பல மனதிற்கு நெருக்கமான மனிதர்கள் மனதில் தோன்றினார்கள். 

பத்திரிக்கைத் துறைசார்ந்த நண்பரின் உற்சாகத்தால்தான் பத்து வருடங்கள் மனதிற்குள் பூட்டிவைத்திருந்த தமிழ்ப்பற்றும் ஊற்றும் பீறிட்டு வந்தது. மனதைக் கவர்ந்த அந்த துடிப்பான குரல் கொண்ட பிரபல பெண் தொகுப்பாளரின் நகைச்சுவையாலும், பேச்சாற்ற்லா லும் ஈர்க்கப்பட்டு வானொலிப் பண்பலைத் தொகுப்பாளராகும் சிறுவயது  கனவும் ஒரு வடிவம் பெற்றது. "ஊரை விட்டு நிரந்திரமாகப் போகிறோம்..இன்னும் அமீரகத்தில் இரண்டு மாதங்கள் தங்க அவகாசம் இருந்தாலும், வீட்டில் குடியிருப்பதற்கான காலஅவகாசம் முடிந்து விட்டது... நானும் குழந்தையும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுகிறோம்" என்று கூறியவுடன், எங்கள் வீட்டில் குடும்பத்தோடு வந்து தங்கிக்கொ ள்ளுங்கள் என்று கண்கலங்கக் கூறிய அவர்கள் குடும்பத்தின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்தது.

அமீரகத்திலேயே சிறிய நிலப்பரப்பு அஜ்மான் தான் என்பதால் சுற்றிப்பார்க்க ஒரு நாள் மிகவும் தாராளமானது. நியாமி என்ற பெயர் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த அரச குலத்தினரே ஆண்டு வந்தார்கள்.சிறிய நிலப்பரப்பென்றாலும் வங்கிகள் குவிந்துதான் கிடந்தது. வீட்டு வாடகை துபாயைக்காட்டிலும் சற்றுக்குறைவு என்பதனால் பலர் அஜ்மானில் வசித்து வந்தார்கள். வேலை நிமித்தமாக துபாய் , ஷார்ஜா என்று செல்லவேண்டும் என்றாலும் சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தொல்லையில்லாமல் சென்றுவிடலாம்.அக்காலத்தில் கப்பல் கட்டுதல், முத்துக் குளித்தல், கடலை வாழ்வாதாரமாய் கொண்டு வாழ்க்கை நடத்தியவர்களின் இடத்தில் உலகிலேயே பெரிய கப்பல் கட்டுமானத்தளம் அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. 

முந்தைய காலங்களில் வளைகுடாவினூடே பயணிக்கும் வணிகர்கள் கடற் கொள்ளையர்களிடம் சிக்காமல் செல்ல வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள் என்றும் கேட்டதுண்டு. அஜ்மான் விமான நிலையம் சுற்றியும் அந்நிய எல்லைக்கு உட்பட்ட மனாமா உறைவிடத்தில் இருந்தது. 12 கி.மீ தூரத்திலேயே ஷார்ஜா விமான நிலையம் இருந்ததால் யார் 60 கி.மீ தொலைவில் அமீரகத்தின் தொலைகோடியில் இருக்கும் அஜ்மானுக்குப் பயனப்படுவார்கள். அரபிய கனரகத் தொழிற்சாலை அஜ்மானைத்தாயகமாய் கொண்டிருந்தது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சொகுசுப் பேரங்காடிகள், கடற்கரை, ஒரு குன்றின் விளிம்பில் ஒரு சாலை வெட்டு, குறிப்பாக கடற்கரையோரமாக இயங்கும் ஒரு பாதை போன்று அங்குள்ள மக்களுக்குக் கேளிக்கைக்கான பல வழிகள் இருந்தது. சிறிய நகரமென்றாலும் அரசாங்கம் அங்கு போக்குவரத்திற்கு என்று 1600 கட்டண வாடகை வண்டிகளை  4 நிர்வாகத்தினரின் உதவியுடன்  இயக்கிக் கொண்டிருந்தது. காலை வேளை என்றால் குறைந்தபட்சம் 10 திராம்களாய் இருக்கும் வாடகை வண்டியின் கட்டணம் இரவு நேரம் என்றால் 4 திராம்கள் என்று ஆனந்த அதிர்ச்சி அளித்தது.அஜ்மானில் அருங்காட்சியம் பார்க்கப் பட வேண்டியது என்றாலும் அதைப்பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏனோ வாய்க்கவில்லை.

கால்பந்து, மட்டைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் அஜ்மானில் பிரபலமாகி இருந்தது. சாதாரணமாகவே அமீரகத்தில் கார் நிறுத்துமிடங்களில் சிறுவர் சிறுமியர் மாலை இரவு நேரங்களில் குழுமி கால்பந்தோ, மட்டைப்பந்தோ விளையாடுவார்கள். குழந்தைகளின் அம்மாக்களும் கதவைப்பூட்டி விட்டு கீழே வந்தமர்ந்து உணவு, பள்ளிக்கூடம், உடைகள் என்று பல தலைப்புகளில் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.பள்ளிக்கூடங்கள் அமீரகத்தில் குவிந்துதான் கிடந்தன. இந்தியப்பாடத்திட்டம், இங்கிலாந்து பாடத்திட்டம் என்று பல நாடுகளை மையமாகக் கொண்டு பள்ளிகள் இயங்கி வந்தன.

மலையாளம், இந்தி போன்ற பல இந்திய மாநில மொழிகள் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டாலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளை மிகச்சிரமப்பட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரபி வாசிக்க எழுதத் தெரிந்த பெரும்பாலான தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. இந்த நிதர்சனத்தைத் தெரிந்து கொள்ளும் பொழுது தாய் மொழியின் மேல் காதல் கொண்டிருக்கும் தமிழ் பற்றாளர்களுக்கு நிச்சயம் வருத்தமாய்த்தான் இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து பிள்ளைகளைத் தயார் செய்து பள்ளிப் பேருந்துக்குக்காக வாசலில் அம்மாக்கள் காத்திருப்பது இங்கொன்றும் புதிதல்ல. அமீரகத்தில் தமிழ் சங்கங்கள் நிறுவுவதற்கு வரையறைகளும் கட்டுப்பாடுகளும் சற்றுக் கடுமையாய்தான் இருந்தது.

பிறந்தநாள் கொண்டாட்ட விழா அல்லது திருமணநாள் விழா என்று ஏதேனும் காரணத்தை வைத்து விடுதிகளில் ஒரு நீண்ட பொது அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சம் நூறு உறுப்பினர்கள் இருப்பதனால் மாதம் யாருக்காவது பிறந்தநாளோ அல்லது திருமணநாளோ வந்துவிடும். ஒவ்வொரு மாதத்திற்கும் பொருத்தமாக ஏதேனும் தலைப்புகளை மின்னஞ்சல் , பகிரி வழி பகிர்ந்து விடுவார்கள் தமிழ் ஆர்வம் கொண்ட மக்கள் அனைவரும் மாதத்திற்கு ஒரு முறையேனும் கூடிக் கவிதை வாசித்துக் கொள்வார்கள்.பேச்சுக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்தத் தலைப்புக்கேற்ப உரையாற்றுவார்கள். 

சாதாரணமாக ஒரு வெளியிடத்திற்கு என்று சென்றால் தங்குவதற்கும், உண்பதற்குமே அதிகம் செலவாகும். எந்த நாட்டிலாவது உங்களை அன்பாய்க் கவனிக்கக் கூடிய நண்பர்களோ, உறவினர்களோ இருந்தார்கள், வெளிநாட்டுக்கு அழைக்கிறார்கள் என்றால் அயல்நாட்டு நுழைவுச்சான்று எடுத்து பறந்து விடுங்கள். 'திரைகடல் ஓடி திரவியம் தேடு ' என்பதற்கேற்ப அமீரகத்திற்கு பொருள் ஈட்டுவதற்குத்தான் எல்லோரும் வருவார்கள். எவ்வளவு கடுமையான சூழ்நிலை இருந்தாலும் அமீரகத்தை விட்டுச் செல்ல யாருக்குமே மனம் வராது. அமீரகத்தைப் பிரிந்து வரும் பொழுது கூட நம் சொந்த இடத்தைப் பிரிந்து வருவதுபோன்ற மென்சோகம் மனதினிலே ஏற்பட்டது.தாய் நாட்டின் மேல் தீராத காதல் இருந்தாலும் திறமைகளைத் திராம்களாக மாற்றி ஆடம்பர வாழ்க்கைவாழ உதவும் அமீரகம் ஒரு மாய உலகம் தான்.....

Friday, May 19, 2017

தாயும் சேயும்


வயிற்றில் இடைவிடாது
எட்டி உதைத்து விளையாடும்
கால்பந்தாட்டம்
வெற்றி வாகை என்றும்
நீயே சூடிட கொண்டிடுவாள்
மனவோட்டம்

இருபது எலும்புகள்
ஒரே சமயத்தில்
ஒன்றாய் உடையும் 
வலி மறக்கும்
உன் அழுகைக் கண்டு
சுரந்திடுவாள் 
அமுதமும்
ஆனந்தக்கண்ணீரும்

காம்பைக் கடித்துப்
பாலைக் குடித்தாலும்
குருதி கசிந்தாலும்
உதிரத்தை உணவாய்
ஊட்டிடுவாள்
தன்மையாய் தலையை 
வருடிடுவாள்.

எச்சில் வழிந்து
மென்று துப்பிய உணவும்
ருசித்திடுவாள்
அஃது அமிர்தத்திற்கு 
ஈடுஇணையில்லை எனவும்
பேருரை ஆற்றிடுவாள் 

அறுந்தவாலாய்
ஆட்டம்போட்டாலும்
ஆயகலைகள் கற்ற 
பிள்ளையென்று 
பார்ப்போரிடம் செய்திடுவாள்
பிரசங்கம்
தனியே அமைத்துத் 
தந்திடுவாள் அரசாங்கம்

வலியவளிடம்
வற்றாது வழிந்தோடும்
எல்லையில்லா இன்பத்தின்
ஆதியும் நீதான்
அந்தமும் நீதான்!

மீனா பஜாரும் அடுக்கு மனிதர்களும்


பர்துபாயில் அமைந்திருந்த இந்துக்கோயில் சுபநாட்கள் அன்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும். வரிசைகள் நீண்ட தூரத்திற்கு நீண்டு சென்று போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. வண்டிகள் நிறுத்துவதற்கும் கடுமையான கெடுபிடியும் ஏற்படும். அமீரகத்திலேயே இயங்கும் ஒரே ஒரு இந்துக்கோவில் என்பதால் கூட்டம் நிரம்பி வழிவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதானே..


கோயிலுக்கு முன்னே அமைந்திருக்கும் கடையில் தமிழ் செய்தித்தாள் , வார மாத இதழ் என்று அனைத்துமே கிடைக்கும். என்றைக்காவது மிகவும் ஆசையாய் இருந்தால் தினத்தந்தி தமிழ் பதிப்பைக் கணவர் வாங்கி வாசித்து மகிழ்வார்.அங்குள்ள அமீரகச் செய்தியுடன் இந்தியச் செய்தியும் சேர்ந்து வரும்.என்னுடைய கவிதைகள் நாளிதழில் வந்திருந்தால் வெள்ளிக்கிழமை நாளிதழுக்காக அலைய வேண்டியிருக்கும்.

வெள்ளிக் கிழமை மட்டுமே நாளிதழில் கவிச்சோலை வரும் என்பது ஒரு காரணம். அதே வெள்ளிக்கிழமை எல்லா நாளிதழும் விற்றுவிடும் என்பது மற்றொரு காரணம்.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து அலைபேசிக்குள் அடைபட்ட செய்திகளைப் படித்தாலும் நாளிதழில் சுதந்திரமாய் செய்திகளைப் படிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு வரையரை இல்லைதானே...


இந்துக்கோவிலுடன், குருத்வாரும் அமைந்திருந்தது மதநல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். பண்டிகைக் காலங்களில் கரும்பு, வாழை இலை, மஞ்சள் , மல்லிகைப்பூ என்று கிடைக்காத பொருட்கள் இல்லை. நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு நடுத்துவதற்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் கோவில் கடைகளிலேயே சொல்லி வைத்து வாங்கியிருந்தார்கள்.

நம் ஊரில் நிகழ்ச்சி நடந்தால் எவ்வாறு தேவையானப் பொருட்களைக் கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துவோமோ அதே போல சிறப்பாக அந்த சீமந்தம் நடைபெற்றதற்கு அந்தக் கடைக்காரர்களின் ஏற்பாடும் ஒரு காரணம். தேவையானப் பொருட்களை ஓரிரு நாட்களுக்கு முன்னால் சொன்னால் போதும் சரியான தேதியன்று கேட்டப் பொருட்களை தவறாமல் கொடுத்து விடுவார்கள்.

கோவிலுக்குச் செல்லும் அந்த குறுகலான பாதையில் நடக்கும் பொழுதே பக்தி மணம் கமழும். இறை இசை பாடல்கள், தேவகானங்கள் பல மொழிகளில் செவிகளில் பாயும். இருபக்கங்களிலும் சிறுசிறு கடைகளில் விற்கப்படும் அழகான இறை விக்கிரகங்கள் மனதை பறிக்கும். வட இந்தியர்கள் வணங்கும் முறையில் இனிப்பு, பூ போன்ற தேவையான பொருட்களை ஒரு பெட்டியாகவும் விற்பார்கள். வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் தினந்தோறும் சுவையான பிராசதமும் வழங்கப்படும்.

ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு மொட்டை போட முடியாதவர்கள் இக்கோவிலுக்குள்ளேயே நாவிதர்களைக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து முடியை ஒரு துணியில் கட்டிக்கொள்வார்கள். இங்குள்ள கோவில் முதல் மாடியில் அமைந்திருந்தது. அனைத்து இந்துக்கடவுள்களின் ஒளிப்படங்களும், சிலைகளும் நிறுவப்பட்டிருந்தாலும் சிறிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. இந்துக்களும் அதிக அளவில் அமீரகத்தில் குடிகொண்டிருந்ததால் அபுதாபியில் பெரிய நிலப்பரப்பில் இந்துக்களுக்கான கோவில் கட்டப்படும் என்று பிரதமர் மோடி வந்திருந்த பொழுது அரசு அறிவித்திருந்தது.


வியாழக்கிழமையென்றால் சாய்பாபா சன்னதியில் கூட்டம் நிரம்பி வழியும். கோவிலின் பின்புறத்திலும் சந்தையைப் போன்று பல வண்ணங்களில் துணிக் கடைகளும், அமீரகத்தை ஞாபகப்படுத்தும் பரிசு பொருட்களும் விற்கப்படும் . சிறுசிறு கடைகளூடே சென்று எதுவும் வாங்க வில்லையென்றாலும் மாலை நேரத்தில் நடந்து கொண்டே கடைகளைக் கடந்து செல்வதும் மகிழ்ச்சியாய்த்தான் இருக்கும். வித்தியாசமான ஆடைகளும்,  வண்ணக் கம்பிளி விரிப்புகளும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.


அதன் அருகிலேயே சிறிய உபநதி  ஓடுவதனால் பெரிய படகுகள் , சிறிய சொகுசுக்கப்பல்கள் இயங்குவதைக் காண முடியும்.  ஒரு நபருக்கு 25 திராம்கள் கொடுத்தால் ஒரு சொகுசுப்படகில் கடல்வழியே பிரபல நட்சத்திர விடுதியான புர்ஜ் அல் அராப் வரைக்கூட்டிச் செல்வார்கள்.அதனருகே சிறிது நேரம் நம்மை உலாவ விட்டு ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்ள நேரமும் தருவார்கள்.


கோவிலுக்கு அருகிலே தான் துபாயின் பிரபலமான அருங்காட்சியமும் அமைந்திருந்தது. அருமையான அருங்காட்சியத்திற்கு 4 திராம்கள் தான் நுழைவுக்கட்டணம் என்று ஆரம்பமே ஆச்சர்யம் கொடுக்கும். அருங்காட்சியத்திற்கு வெளியேவும் பெரிய படகு , பீரங்கிகள், அதன் குண்டுகள் என்று பல மாதிரிகளை நிறுவி இருந்தார்கள். அல்ஃபகிதியில் இருந்த அந்த பழைய கோட்டையே பின்னாளில் அருங்காட்சியமாய் மாறியிருந்தது.


வீட்டிற்கு அருகிலேயும்,  விருந்தினர்களை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இருந்ததால் பல முறை அந்த அருங்காட்சியத்தைப் பார்வையிடும் வாய்ப்புக்கிடைத்தது.
பண்டைக்காலத்தில் மணல்காற்று ஏற்படும் பொழுது மணலில் இருந்து காத்துக் கொள்ள என அழகிய முறையில் காற்றை மட்டும் பிரித்தெடுக்கும் வகையில் கூண்டுகளை அமைத்திருந்தனர்.


அங்கிருந்த மக்கள் முந்தைக்காலத்தில் உபயோகித்த மண்கலங்கள், கட்டில்கள் என்று அவர்கள் பயன்படுத்திய அத்தனைப் பொருட்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். கீழ் தளத்திற்குச் செல்லும் பொழுதே பாடம் செய்யப்பட்ட பறவைகளை அந்தரத்திலே சுழல விட்டிருந்தார்கள். துபாயின் வளர்ச்சி , ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை ஆர்வமூட்டும் காணொளியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை படிப்படியாக விளக்கப்பட்டிருந்தன.

நிஜ சந்தையை நம் கண்முன்னே ஏற்படுத்தும் வகையில் மாதிரிக்கடைகளைத் தத்ரூபமாக அமைத்திருந்தார்கள். உண்மையான அங்காடி என்று நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே சுற்றுப்புறத்தில் அதற்கேற்றார் போல சத்தத்தையும் ஒலிக்க செய்து நம்மை அந்த இடத்திற்கேக் கூட்டிச் சென்றிருந்தார்கள். முதன் முதலில் அருங்காட்சியத்திற்குச் சென்ற பொழுது யார் பொம்மைகள் யார் உண்மையான நபர்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாய்ப் போனது.


மளிகைக்கடை என்றால் அக்காலத்தில் உள்ள அனைத்து மளிகைச்சாமான்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் உண்மை போன்று நிருத்திய கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொற்கொள்ளர்கள் கடை என்றால் அதற்கேற்றார்ப் போல அடிக்கும் சத்தங்களை ஒலிக்க விட்டிருந்தார்கள். அமீரகத்தில் வாழ்ந்த மக்களுக்கு கப்பல் கட்டுவதும், முத்துக்குளிப்பதும் அவர்களின் பாரம்பர்ய தொழிலாய் இருந்து வந்ததால் அதற்கு என்று அதிக அக்கறைச் செலுத்திக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.


கட்டுமானப்பணியில் உள்ள கப்பல், காலில் கயிற்றைக்கட்டிக் கொண்டு தலைகீழாய் இறங்கும் முத்துக்குளிக்கும் மனிதர்கள் , மீன் வியாபாரிகள் போன்ற அமைப்புகள்... அவை அனைத்துமே நாம் அருங்காட்சியத்தில் இருக்கிறோம் என்று மறக்கச் செய்தது. முத்துக்கள் கிடைத்தவுடன் அவற்றை எப்படி அதன் அளவு கொண்டு பிரிப்பார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள நேரிட்டது.சல்லடை போன்ற பல தட்டில் பல அளவில் ஓட்டைப் போட்டிருந்தார்கள்.


முத்துக்களை அச்சல்லடையில் சலிக்கும் பொழுது அதன் அளவுக்கு ஏற்ப முத்துக்கள் பிரிக்கப்படுமாறு அமைத்திருந்தார்கள். அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிடைத்த உடைந்த மண்பாண்டங்கள், ஆடை ஆபரணங்கள் மட்டுமல்லாது 
மனிதனின் எலும்புக்கூடுகளையும் காட்சிப்படுத்தி மிரட்டியிருந்தார்கள். எங்கு சென்றாலும் மன்னரின் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைத்திருக்க வந்திருந்த விருந்தினர்களிடம் மன்னரின் முழுப்பெயரையும் சரியாகக் கூறி பாராட்டைப் பெற்றுக்கொண்டேன்.


அருங்காட்சியம் அருகிலேயே மீனா பஜார் என்றழைக்கப்படும் சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லையோ என்று தோன்றிவிடும். அந்தத் தெருவில் நடந்து சென்றாலே ஊரிலிருந்து சுற்றுலா வந்திருக்கும் பொழுது உறவினர்கள் நம்மிடம் கேட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையும் நியாயமான விலையில் வாங்கிவிடலாம்.பெருநகர ஊர்தி நிலையங்கள் அருகே மட்டுமல்லாமல் வீதியில் ஆங்காங்கே 1-10 திராம் கடையை நிறுவி இருப்பார்கள். அங்கு நம் நாட்டுக்கணக்கின்படி 10 திராம் என்றால் 180 ரூபாய்க்குள் ஒரு பொருளை வாங்கிவிடலாம்.


வழியெங்கும் அமைக்கபட்டிருக்கும் நகைக்கடைகளும் உணவு விடுதிகளும் உங்களை நகை வாங்கவும் சாப்பிடவும் தூண்டினால் நான் பொறுப்பல்ல...ஒருமுறை வானொலியில் நடைபெற்ற போட்டியில் அதிர்ஷ்டவசமாக 1 கிராம் தங்கம் வெல்ல சந்தோஷத்தில் மிதந்து அப்பாதைவழி நடந்திருக்கிறேன்.நம் நாட்டில் உள்ள அனைத்து நகைக்கடையும் இங்கே உண்டு...உணவு விடுதிகளும் இங்கே உண்டு...இங்குள்ள நகைக்கடைகளைத் திறந்து வைப்பதற்காக புகழ்பெற்ற மலையாள, இந்தி நடிகர் நடிகைகள் இங்கு அடிக்கடி வருவதுண்டு..


சரவணபவன், வசந்தபவன் போன்ற புகழ்பெற்ற உணவகங்களும் இங்கே நிறுவப்பட்டு தங்கள் சேவையை இங்குள்ள மக்களுக்கு ஆற்றி வந்தார்கள். வசந்தபவனில் வாரவிடுமுறை நாட்கள் என்றால் குறைந்த கட்டணத்திற்கு அளவில்லாமல் பல வகையான உணவுவகைகளை விநியோகித்தார்கள். தங்கும் விடுதியைப் பொறுத்தவரை , ஒரு நாளுக்கு 150 திராம்கள் கட்டணம் என்பது சுற்றுலாவுக்கு வந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.சவர்மா, ஃபிலாஃபில் போன்ற அமீரக உணவுகளைச் சுவைக்காமல் போனால் அமீரகச் சுற்றுலாவை முழுமையாய் அனுபவிக்காதது போல்தான்.-

ஒரு முழுக்கோழியை நன்றாக மசாலா தடவி உள்ளே எலுமிச்சைப்பழம் வைத்து மிதமான தீயில் வாட்டிக் கொண்டிருப்பார்கள்.( grilled chicken )என்று அழைக்கப்படும் அவ்வுணவிற்கு குபூஸ் எனப்படும் மைதாவினால் செய்யப்பட்ட பெரிய சப்பாத்தியையும் சேர்த்தே தருவார்கள்.

ஹம்மஸ் என்றழைக்கப்படும் கொண்டைக்கடலையினால் செய்யப்பட்ட உணவுவகை, முட்டை வெள்ளைக்கருவினால் செய்யப்படும் மயோனஸ், கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய் போன்றவை கொசுறுகளாக வழங்கப்படும்.கோழியினுள்ளே french fries என்றழைக்கப்படும்  சில நீட்டமான  உருளை வருவல்களும் வைத்துத்தரப்படும்.படிக்கும் பொழுதே தங்கள் நாக்கில் எச்சு ஊரினால் என்னை சபிக்காதீர்கள்...நம் ஊரிலும் இதுபோன்ற உணவுகள் கிடைக்கத்தான் செய்கிறது.


துபாயில் புதிதாய்த் திறக்கப்பட்டிருந்த துபாய் பார்க்ஸ் அன்ட் ரிசார்ட்ஸ் என்றழைக்கப்படும் கேளிக்கைப் பூங்காவிற்கு கட்டணமில்லாமல் செல்லும் ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது. கணவரின் நண்பர் அரசாங்கத்தில் வேலைப்பார்க்க அவருக்குப் பரிசாக சில நுழைவுச்சீட்டுக்கிடைத்தது. புதிதாய் திறக்கப்பட்டிருந்த அந்தக் கேளிக்கைப் பூங்காவை மக்களிடம் பிரபலப் படுத்துவதற்காகவும் விளம்பர நோக்கத்திற்காகவும் பல நுழைவுச்சீட்டுக்களைப் பரிசாய் வாரி இறைத்திருந்தார்கள்.

மதியப்பொழுதில்தான் அந்த தகவல் தெரிய வர அவசரஅவசரமாய் கேளிக்கைப்பூங்காவைச் சுற்றிப்பார்க்கும் ஆர்வத்தில் கிளம்பினோம். (dubai parks and resorts) என்ற பூங்கா சமீபத்தில் சில பிரபலங்களால் திறந்து வைக்கப்பட்டிருந்தது என கேள்விப்பட்டிருந்தோம்.கேளிக்கைபூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியா க இருந்தாலும் நுழைவுச்சீட்டிற்கான கட்டணம் கொஞ்சம் கலங்கவைத்திருந்தது. குறைந்தபட்சம் 295 திராம்கள் நுழைவுக் கட்டணம் என்றாலும் நம் இந்திய மதிப்பீட்டில் மாற்றும் பொழுது கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்யும்.

இவ்வளவு பணம் செலவழித்து நுழைவுச்சீட்டுக்களை வாங்கினாலும்
ஒரே நாளில் அவ்வளவு பெரிய கேளிக்கைப்பூங்காவை சுற்றிப் பார்ப்பது என்பது கடினமான காரியம்தான். அதனை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே  அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏராளமான நுழைவுச்சீட்டை வழங்கியி ருந்தார்கள். அபுதாபி போகும் வழியில் இது என்னடா வண்ணவண்ணமான இரட்டை இலை என்று கண்டு வியந்திருக்கிறேன். பின்னாளில் அந்தக் கேளிக்கைப் பூங்காவிற்குச் செல்லும் பொழுதுதான் அந்த அலங்காரம் அப்பூங்காவிற்கானது என தெரிந்து கொண்டேன்.

நண்பருக்குத் தந்தது போல பல நுழைவுச்சீட்டைப் பல அரசுப்
பணியாளர்களுக்கும் தந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் அந்த நாட்டு நிரந்திர குடிமகன்களுக்கு மட்டும் முதல் வகுப்பு நுழைவுச்சீட்டை விநியோகித்திருந்தார்கள். சவாரிகளில் நீண்ட நெடும் வரிசை இருந்தாலும்  முதல் வகுப்பு நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு என தனி வரிசை வைத்திருந்தார்கள். அதனால் கூட்டமாகவே இருந்தாலும் பிரத்யேக அட்டை வைத்திருப்பவர்கள் கால்கடுக்கக் காத்திருக்கும் அவசியமில்லை.


(hollywood, bollywood, legoland, water park ) ஹாலிவுட், பாலிவுட், லீகோலேணட் , தண்ணீர் பூங்கா என்று அப்பூங்காவை பல பகுதிகளாய்ப் பிரித்திருந்தார்கள். லீகோ லேண்டு என்றழைக்கப்படும் அப்பகுதியில் சிறுவர் சிறுமியர் ஆர்வமாய் விளையாடும் அடுக்கு விளையாட்டுச் சாமான்களை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று அதன் அருமை பெருமையை விளக்கினார்கள். கேளிக்கைப்பூங்காவிற்கு வருகை தரும் குழந்தைகளைக் கவருவதற்காகவே விளையாட்டு தளங்களையும் ஏற்படுத்தித் தந்திருந்தார்கள்.

சிறு குழந்தைகள் வாயில் வைத்துக்கடித்தாலும் அப்பொருளின் தன்மைக்குறைந்து  அவர்களுக்கு கேடு ஏற்படாதவாறு அமைத்திருந்தார்கள். என் அத்தை மகளுக்கு கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் வாங்கிய இதைப்போன்ற விளையாட்டுச் சாமான் உடையாமல் இன்றும் புதிது போலவே காட்சியளிப்பது இதன் தரத்திற்குச் சான்றாகும். 
சின்னச் சின்ன அடுக்குச் சாமான்களைக் கொண்டு பிரசித்திப் பெற்ற பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டுமல்லாது சிறுவர்களைக் கவரும் கதாப்பாத்திரங்களையும் வடிவமைத்திருந்தார்கள். மனிதனால் இவ்வாறு அடுக்கிவைக்க முடியுமா என்ற பிரம்மிப்பு குறையாத என் கேள்விக்கு , எந்திரங்களால் இதனைச் சுலபமாய் விரைவாய்ச் செய்து முடிக்க முடியும் என்று கணவரிடமிருந்து பதில் வந்தது.

ஒவ்வொரு சவாரிக்கும் கால்கடுக்க நிற்பதே எரிச்சலைத் தந்தது. சில மணிநேரம் கழித்துத்தான் நண்பரின் மேலாளரும் தன் குடும்பத்தைக் கூட்டி வந்திருப்பதைப் பார்த்தோம். சோர்வடைந்திருந்த எங்களுக்கு அவரின் உற்சாகமும் துறுதுறுப்பும் தொற்றிக்கொள்ள மீதம் இருந்த சில மணிநேரத்தில் எப்படியாவது முடிந்த அளவு சவாரிகளைச் செய்து விட வேண்டும் என்று பறந்து ஓடினோம்.

3D முப்பரிமானம் என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தைக் கேள்விபட்டிருப்போம். திரைப்படங்களில் பார்த்து இரசித்திருப்போம். ஆனால் இங்கே ஒரு காட்சியில் எத்தனை பரிமானம் என்று எண்ணமுடியாத அளவுக்கு இருந்தது. திரையில் சண்டை போடுகின்றார்கள். ஒருவன் கீழே தண்ணீரில் விழுகிறான். அந்தத் தண்ணீர் எங்கள் அனைவரின் மீதும் தெளிக்கின்றது. எலிகள் கூட்டம் கூட்டமாகத் திரையிலிருந்து ஓடி வருகின்றன. அவை என் கால்களுக்கு அடியில் செல்கின்றன. அதை என்னால் நன்கு உணர முடிகிறது.

அருவருப்பில் நான் என் கால்களைத்தூக்கிக் கொண்டேன். திரையில் நாயகன் அடிவாங்கும் பொழுதெல்லாம் நாங்கள் உட்கார்ந்திருக்கும் சொகுசு நாற்காலி அதிர்கிறது. கண்களில் அணிந்திருக்கும் மாயக்கண்ணாடியால் திரையில் உள்ள அனைத்துமே எங்களை நோக்கிப் பாய்ந்து வருகின்றது. இவை அனைத்தும் கண்முன்னே அறங்கேறியதில் பெரியோர்களே சற்று அதிர்ந்திருந்தார்கள். சிறுவர் சிறுமியர்களை அனுமதிக்காத காரணம் அப்பொழுது தான் புரிந்தது.


பின்பு தான் தெரிந்து கொண்டேன், முன்னிருக்கையில் ஒரு துளையில் இருந்து வந்தத்தண்ணீர் என் முகத்தில் பீய்ச்சி அடித்திருக்கிறது என்று..எலி ஓடியதை உணரவும் மிதமான காற்றை காலடியில் செலுத்தியிருந்திருக்கிறார்கள்...பாலிவுட் என்ற பெரிய பகுதியில் ஆடத்தெரியாதவர்கள் கூட ஆடுவதற்கு ஏதுவாக நல்ல இந்திப்பாடலை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். புகழ்பெற்ற இந்தி நடிகர்களான ஷாரூக்கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோர் மிகவும் சக்திவாய்ந்த கதாநாயகர்களாக நடித்திருந்த ரா-1 , கிருஷ் போன்ற படங்களைக் கதைக்களமாகக் கொண்டு சில சவாரிகளை அமைத்திருந்தார்கள். ரா 1 படத்தில் வரும் எந்திர பொம்மையை தத்ரூபமாக காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

புகழ்பெற்ற அரண்மனையைப் போன்று மாதிரியைக் காட்சிக்கு வைத்து மின் விளக்குகளால் அலங்காரப்படுத்தியிருந்தார்கள்.
பழைய இந்திப்படங்களை மையமாகக் கொண்டு கற்பனை செய்து விதவிதமான எண்ணங்களை நிஜமாய் கண்முன்னே நிறுத்தியிருந்தார்கள்.பிரசித்தி பெற்ற ஆங்கிலத் திரைப்படத்தையும் மையமாய்க் கொண்டு பல மனிதர்களை அக்கதாப்பாத்திரங்களாகவே ஒப்பனை செய்து உலாவ விட்டிருந்தார்கள். சூனியக்காரி போன்று வேடமிட்டிருந்தப் பெண்ணைப் பார்த்தாலே பயமாக இருந்தது..பின் எப்படி அருகில் சென்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ள???


ஐரோப்பிய நாட்டுத் தெருக்களில் நடப்பது போன்று சுற்றுப்புறத்தை ஏற்படுத்தி அதில் நாம் நடப்பதை நம்பவைத்திருந்த கலைஞர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தே ஆகவேண்டும். பூங்காவின் வாசலுக்குச் செல்லவே தனி பேருந்துக்கள் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகத்தை வைத்தேத் தெரிந்து கொள்ளலாம், அப்பூங்கா எவ்வளவு பெரியதென்பதை....

Wednesday, May 17, 2017

அந்தரத்திலே அமரலாம்...சாப்பிடலாம்...பறக்கலாம்


துபாயில் தோஃகுரூஸ் ( dhowcruise) என்றழைக்கப்படும் மிதவைக்   கப்பலில் நிச்சயம் பயணித்தே ஆகவேண்டும். இரண்டு இடங்களில் இது போன்று சிறிய உபநதியில் ( creek water) இரண்டு அடுக்குப் பெரிய படகில் பயணித்துக் கொண்டே சாப்பிட்டுச் சுற்றுப்புற அழகை ரசிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் இடம் , பர்துபாயில் எங்கள் வீட்டு அருகிலேயே இருந்தது. இரவு நேரத்தில் எங்கள் வீட்டுச் சாளரத்தின் வழி பார்த்தால் அழகாய் அலங்கரித்தப் பெண் அன்னமாய் மாறியதோ என்று எண்ணும் அளவிற்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மெதுவாக ஊர்ந்து செல்லும்.

இரண்டாம் இடம், ஜுமரை விடுதிகள் அருகே இருக்கும் மெரினாவில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டின் அருகே இருந்த மிதவைக்கப்பல் சவாரியும் சராசரியாக 100 திராம்களுக்குள்ளேயே இருக்கும். கட்டணத்திற்கு ஏற்றார் போல உணவு வகைகளும், அவற்றின் தரமும் மாறுபடும். டனோரா நடனம் மற்றும் சில பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் மிதவைக்கப்பலிலேயே நடைபெற வாய்ப்புள்ளது.

என்ன ,பர்துபாயில் உள்ள உபநதி அருகே  மெரினாவில் இருப்பது போன்று வானுயரத் தனித்தன்மையுடனான பெரிய பெரிய கட்டிடங்களைப் பார்ப்பது அரிது. பிரியசகி திரைப்படத்தின் சில காதல் காட்சிகள் மற்றும் ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்-விவேக்கின் நகைச்சுவைக்காட்சிகள்  இந்த உபநதிக்கரையோரத்தில் படமாக்கப்பட்டதை இவ்விடத்தைப் பார்த்தபின் அத்திரைப்படக்காட்சிகளைப் பார்த்த பொழுது தான் தெரிந்து கொண்டோம். தேரா ( deira) என்றழைக்கப்படும் இடம் கரையின் அந்தப்பக்கம் இருந்ததால் வணிகம் மற்றும் வியாபாரத்திற்காக மக்கள் சென்று வர என 1 திராம்களுக்குப் படகுச்சவாரியை அரசே ஏற்பாடு செய்திருந்தார்கள்.


கரையின் மறுபக்கம் சந்தை இருந்ததால் நண்பர்களுடன் ஒரு நபருக்கு 1 திராம் என்று கட்டணம் செலுத்தி அப்பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்திருந்தோம். குளிர் நேரங்களில் அந்த உபநதி அருகே சின்ன சின்ன அங்காடிகளூடே குளிர்த் தென்றலை அனுபவித்து நடந்து செல்வது சுகமான ஒன்று தான். இதுவே கோடை காலம் என்றால் இரவு 12 மணிக்கு வெளியேச் சென்றாலும் அனல் காற்றுதான் நம் முகத்தில் அடிக்கும். நானும் கணவரும் நண்பர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டபின் மெரினாவில் உள்ள மிதவைக்கப்பலிலேயே பயணம் செய்யலாம் என முடிவு செய்தோம்.

தமிழ் நண்பரின் சுற்றுலா நிறுவனம் வழி இந்த மிதவைக்கப்பல் சவாரிக்கு தனி நபருக்கு 140 திராம்களுக்கு என ஏற்பாடு செய்திருந்தோம். தனி வண்டியில் நம்மை அழைத்துச் சென்று சவாரி முடிந்தபின் நம்மைத் திரும்பி அழைத்துவருவது வரை அவர்களின் பொறுப்பு. வாடகை வண்டியில் செல்லும் பொழுது நீண்ட வருடங்களாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு செல்லுகையில் துபாய்க்கு குறுகிய காலப்பயணம் மேற்க்கொண்டிருந்த வயதான பஞ்சாபி தம்பதியர்களுடன் உரையாட நேரம் கிடைத்தது.



பல வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சுற்றுலா வந்திருந்தாலும் தற்பொழுது அமைந்திருந்த துபாயின் தோற்றமும் பொலிவும் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. அடுத்த நாள் அதிகாலை( hot air ballon ride ) வெப்பக்காற்று ஊதற்பை என்றழைக்கப்படும் சவாரிக்கு முன்பதிவு செய்திருந்ததால், அவர்களிடம் அதுபற்றி ஆர்வமாய்ப்பேசிய பொழுது தான்     அவர்களும் அச்சவாரியை ஏற்கனவே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

வேறொரு கணவன் மனைவியும் தங்கள் சிறு குழந்தைகளைத் தங்கள்ப் பெற்றோர்களிடம் விட்டுவிட்டு தம்பதியராகத்துபாயைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தார்கள். நம்மைப் போல் சிலரும் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மனம் சற்று அமைதி அடைந்தது. அவர்களிடம் அமீரகத்தில்  எனக்குத் தெரிந்த சிறந்த சுற்றுலா இடங்களைப் பகிர்ந்து  அவற்றை நிச்சயம் பார்க்குமாறு பரிந்துரைத்தேன். மிதவைக்கப்பல்களில் இத்தனை வகைகளா என்று எண்ணும் அளவுக்கு வெள்ளைத்தோல் மக்களால் சொகுசு கப்பல்கள் நிரம்பி வழிந்தன.


இரவு குளிர்நேரம் என்றாலும் மிதவைக்கப்பலின் மேலடுக்கிலேயே பயணம் செய்யலாம் என்று கணவரை மேலே அழைத்துச்சென்றேன். அதிகக்குளிர் எடுத்து சிறிது நேரம் கழித்துக் கீழே சென்றுவிடலாம் என்று கூறினால் அடிவாங்குவாய் என்று கணவர் செல்லமாக எச்சரிக்கை செய்தார். நல்லவேளை கீழே உட்கார்ந்திருந்தால் அருமையான குளிர்காற்றையும் , அழகு கட்டிடங்களின் அழகையும் உணர முடியாமல் போயிருக்கும்.

வந்திருந்த அனைவரையும் அழகான கடல்நீர் மற்றும் அருமைக்கட்டிடங்களின் பின்புலத்தில் ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தது ஒரு பெண் ஒளிப்படக்காரர்.அவர் தன் முடியை ஆண்கள் போன்று வெட்டியிருந்ததால் கணவர் அவரை ஆண் ஒளிப்படக்காரர் என தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.பிலிப்பினோக்களில் ஆண்கள் பெண்கள் அனைவருமே ஒரே நிறத்தில் இருப்பதால் அவர்களை ஆணாபெண்ணா என கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். அதிலும் முகவெட்டு, முடிவெட்டு அனைத்துமே நம்மைக் குழப்பிவிட்டுவிடும்.

100 திராம்கள் அதிகம் என்றாலும் வசீகரிக்கும் அட்டைப்படங்கள் கொண்ட பெரிய உரையில் இரண்டு மூன்று  ஒளிப்படங்களை ஒட்டித்தந்தார்கள். கணவரும் ஞாபகார்த்தமாக இருக்கட்டும் என்று கூறி என்னை ஆச்சர்யப்படுத்தி ஒளிப்படங்களை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். பெரும்பாலும் அனைத்துச் சுற்றுலா இடங்களிலும் அந்த இடத்துக்கான ஒளிப்படக்காரர் நம்மை வளைத்து வளைத்து ஒளிப்படம் எடுப்பார்கள்.பின்பு சுற்றுலா முடித்துவிட்டு கணினியில் நமது ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு பணம் செலுத்தி ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


ஆனால் இங்கோ நாம் என்ன ஒளிப்படங்களை வாங்கவா போகிறோம் என்ற அலட்சியத்தில் உட்கார்ந்து ஒளிபடக்காரர் ஒளிப்படம் எடுக்க ஒத்துழைப்புக் கொடுத்தோம். கணவர் நிறைய தடவை கண்களை மூடினாலும் அப்பெண் திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டி கணவரும் நானும் அழகாய்த் தெரியுமாறு படம்பிடித்துக்கொடுத்தார். சாதாரணமாகவே சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச்சீட்டும் அங்கே எடுத்தப்படங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கான கட்டணமும் சமமாய் இருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைத் தரும்.

வந்தவுடன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வண்ணம் பழச்சாறும், சமோசாவும் உபசரிக்கப்பட்டன. பசியில்லை என்று கூறிய கணவர் ஆரம்ப உணவைச்சாப்பிட்டவுடன் சிற்றுண்டி பசியைக்கிளப்பி விட்டது என்று சிரித்தார். சுற்றி இருந்த ரகரகமான கட்டிடங்களைப் பார்வை இடுவதற்காவாவது இரண்டு அடுக்குப் பெரிய படகில் பயணம் செய்தே ஆக வேண்டும். கட்டிடங்களைக்கூட இவ்வளவு கலை இரசனையுடன் கட்ட முடியுமா? அல்ல கட்டிடங்களைக்கூட இரசிக்கும் அளவுக்கும் நாம் சிறந்த இரசனையாளராக மாறி விட்டோமா என்ற கேள்வி மனதுக்குள் நிச்சயமாக எழும். உலகத்தில் உள்ள அனைத்து கட்டிடத் திறமையாளர்களும் இங்கே தான் சங்கமிக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படும்.


ஏனென்றால் எந்த ஒரு பயணத்திலும் இது போன்றுவித்தியாசமான அழகிய கட்டிடங்கள், பாலங்கள், இரவில் அவற்றின் அழகையும் மெதுவாக ஊர்ந்துகொண்டே இரசிக்க முடியாது. பெரியபடகில் கொஞ்சம் நெருக்கமான இடம் என்றாலும் டனோரா நடனத்தை சிறப்பாக அரங்கேற்றினார் அந்த திறமையான கலைஞர். ஒளி, ஒலியுடன் அவர் கைகளில் வைத்திருந்த நான்கு பறை போன்ற வட்டத்தட்டுகள் அவரது ஆட்டத்திற்கு மெருகு ஊட்டியதாய் அமைந்தது.



படகில் மிதந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் மேலே ஆகாயத்தைப் பார்த்தபொழுதுதான் அந்தரத்தில் அமர்ந்தபடி சாப்பிடலாம் என்று புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் விளம்பரம் ஞாபகம் வந்தது. ஒரு பெரிய
சாப்பாட்டு மேஜையுடன் இணைந்திருக்கும் இருக்கையில் தேவையான பாதுகாப்புக் கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு அணிவித்து அமர்த்தி விடுவார்கள். உணவு உண்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று அனைவருமே அந்தரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிடுவார்கள். அந்தரத்திலே மிதந்து சாப்பிடுவது வித்தியாசமான அனுபவமாய் இருந்தாலும் உயரத்தைப் பார்த்தால் வயிற்றைப் பிறட்டி விடும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாகச் செல்லக்கூடாது.



பல் இருப்பவர்கள் பக்கோடா சாப்பிடுவார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பது உண்மைதான் போலும். பணம் இருந்தால் வானிலும் சிறகில்லாமல் பறந்து உணவை உண்டு மகிழ்ந்திடலாம்.
வானத்தில் இருந்து காலுக்கு அடியில் கட்டிடங்களைக் கொண்டு சென்றும் உணவை உண்டு இரசித்திடலாம்.பல நடிகர் நடிகையர் பனைமரத்தீவின் மேலே மிதந்தபடி பயிற்சியாளருடன் ஒளிப்படங்கள் பதிவு செய்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கான தளமும் அலுவலகமும் அங்கே மிதவைக்கப்பலில் மிதந்து செல்கையில் பார்க்க நேரிட்டது.


இருபாலினத்தவருக்குமே ( bmi )உடல் உயரத்திற்கும் எடைக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்கள். பெண்கள் என்றால் எடை / (மீட்டரில் உயரம்)^2  அதிகபட்சமாக 27.5 ஆகவும், ஆண்கள் என்றால் 30 என்றும் வரையருத்திருந்தார்கள். இச்சவாரிக்குப் பெண்கள் அதிகபட்சம் 5.7 அடி இருந்தார்கள் என்றால் 79 கிலோ இருக்கலாம். ஆண்கள் 90 கிலோ வரை இருக்கலாம் என்பது ஒரு தோராயமான கணிப்பு.


இந்த எடைக் கணக்கீட்டில் சில புள்ளிகள் வித்தியாசத்தால் அருமையான வாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவள்.எப்படியோ 2000 திராம்கள் செலவு செய்ய கணவர் ஒப்புக்கொண்டாலும், கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போனது. இவ்வளவு தூரம் மேலிருந்து குதிக்கப்போகிறோம் இந்தக்கணக்கீட்டுக்கும் வானில் உள்ள காற்றழுத்தம் போன்றவைக்கெல்லாம் எதாவது சம்மந்தம் இருக்குமென்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இந்த சாகசப் பயணம் செய்த நடிகை ஒருவரின் பேட்டியைப்படித்த பின்னேயே இந்த சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் மேலோங்கியிருந்தது. இந்தச்சவாரியை செய்திருந்த அனைவருமே வாழ்க்கையிலேயே மிக அருமையான ஆசிர்வதிக்கப்பட்ட அழகான தருணம் என்று விவரித்திருந்தார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்று வானில் இருந்து குதித்து செய்யும் சவாரி(sky diving) பல நாடுகளில் நடத்தப்படுகிறது.


சவாரி செய்ய தகுதியுடையவர்கள் சில பயிற்சிகளுக்குப்பின்
கீழிருந்து விமானத்தில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். பின்னர் ஒரு பயிற்சியாளரைக் கட்டிக்கொண்டு கீழே குதிப்பதாய் இருக்கும். வான்குடை மிதவை இருப்பதனால் சிறிது நேரம் காற்றில் மிதந்து சில சேட்டைகளை விளையாட்டாகச் செய்யச் சொல்வார்கள்.

நாம், நமது பயிற்சியாளருடன் என்று இருவர் மட்டுமல்லாமல் நமது சாகசத்தையும் படம்பிடித்து, காணொளியாய் பதிவிட இன்னொருவரும் நம்முடன் சேர்ந்து குதிப்பார். ஐரோப்பாவில் இந்தச்சாகத்தை என்னுடைய கல்லூரித் தோழி செய்து காணொளியைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டதில் இருந்து நாமும் இந்த சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.


உலகில் இது போன்று பல இடங்களில் இது போன்ற சாகசம் செய்யும் வாய்ப்பிருந்தாலும் இந்தப்பனைமரத்தீவைப் பின்புலமாய்க் கொண்டு இச்சாகசத்தைப் செயல்படுத்துவது பெருமையான ஒன்று தான். துபாயிலேயே பாலைவனத்தில் இச்சாகசத்தைப் புரியும் வாய்ப்பும் இருந்தது. சாகச அலுவலகத்தைக்கடந்தால் இரவு நேரத்தில் ஜொலிக்கும் ஒற்றைத்தண்டவாள ஊர்தியின் பாதை, அட்லான்டிஸ் நட்சத்திர விடுதியைப்பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். நாங்களும் வகையான உணவுகளை உண்டு முடித்துவிட்டு இனிப்புகளை ருசித்து முடிக்கும் பொழுது அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துத் திரும்பவும் நேரம் சரியாக இருந்தது.


(hot air balloon )வெப்பக்காற்று ஊதற்பை சவாரியையும் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு மனதிலே ஓர் ஓரமாக புதைந்திருந்தது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் தயாராய் இருக்கச் சொல்லிவிடுவார்கள்.நாம் இருக்கும் இடத்திற்கு வந்து நம்மைக்கூட்டிச் சென்று திரும்பி அழைத்துவருவதுடன் காலை உணவும் சேர்த்து ஒரு ஆளுக்கு அதிகபட்சம் 800 திராம்கள். ஏற்கனவே அந்த வயதான தம்பதியினர் அதிகாலைச்சூரிய உதயத்தை வானில் இருந்து மிதந்தபடி பார்ப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியது காதில் ரீங்காரமிட்டது.


சமீபத்தில் இது போன்று ஊதற்பை ( balloon) சாகசச்சவாரியில் அசம்பாவிதம் ஏற்பட்டுச் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கேள்விபட்டுச் சற்றுக் கலங்கித்தான் போயிருந்தோம். மக்களாட்சி அல்லாமல் அரசர் ஆட்சி நடைபெறுவதால் ஊடகங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.தவறுகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படும் ஆனால் அது பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிடப்படமாட்டாது.

அவ்வளவு நாட்களாக சரியாக இருந்த வானிலை நாங்கள் சவாரி செய்ய முடிவெடுத்திருந்த நாளில் இருந்து தலைகீழாய் மாறியிருந்தது. காற்று பலமாக அடித்தது. மின்னல் வெட்டியது. கணவர் எனதுத் தொல்லைத்தாங்காமல் இணையத்தில் ஊதற்பை 
சவாரியைப்பற்றிய விவரங்களைப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது வங்கிக்கணக்கு இணையத்தில் இணைக்கப்பட்டு இருந்ததால் தவறுதலாக வேறொரு பொத்தானை அமுக்க இரண்டு நபர்களுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு இணையத்தில் நடைபெற்று விட்டது. கணவர் தவறுதலாக முன்பதிவு நடந்து விட்டதே என்று சற்றுக்கவலைப்பட்டாலும் நான் மனதிற்குள் மகிழ்ந்து இருந்தேன்.


வெப்பக்காற்று ஊதற்பை சவாரி நிறுவனத்திலிருந்து உற்சாகமாய் ஒரு ஓட்டுநர் வந்திருந்தார். ஆறு மாதகாலம் சுற்றுலாப்பயணிகளின் வருகை மற்றும் பதிவைப் பொறுத்தும் வானிலையைக்கருத்தில் கொண்டும் வெப்பக்காற்று  ஊதற்பை இயக்கப்படும் என்று 
ஓட்டுநர் கூறினார். இரண்டு நிறுவனங்கள் வெப்பக்காற்று  
ஊதற்பை சாகசச் சவாரிகளை அமீரகத்தில் நடத்தி வருகின்றனர். 
அதில் தங்களின் நிறுவனத்திலிருந்து பறக்கும் வெப்பக்காற்று  
ஊதற்பை திறமையான அதிகாரிகளால் பிரச்சனையில்லாமல் ஓட்டப்படுகிறது என்று பெருமிதப்பட்டுக் கொண்டார்.


தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஐரோப்பாவைச் சேர்ந்த பொறியாளர்கள் மிகுந்த அறிவுக் கூர்மையுடனும் லாவகத்துடனம் வெப்பக்காற்று  ஊதற்பையைச் செலுத்துவார்கள் என்று கூறி ஓட்டுநர் அவர்களுக்குப் புகழ்மாலைச் சூட்டினார். ஊருக்கு மிகவும் ஓரமாக வெப்பக்காற்று  ஊதற்பைச் சவாரி நிலையம் அமைந்திருந்ததால் அதிகாலையிலேயே ஒருமணிநேரம் பயணம் செய்து தூங்கி வழிந்து நிலையத்தை அடைய வேண்டியதாயிற்று. 

வழியில் இரண்டு நட்சத்திர விடுதிகளிலிருந்து 7 நபர்களை ஏற்றிக்கொண்டு ஆசையாய் நிறுவனத்தின் எல்லையை அடைந்திருந்தோம். எங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு வரும்பொழுதே வானிலை எப்பொழுதும் போல் இல்லை என்று ஓட்டுநர் கிலி ஏற்படுத்தியிருந்தார். நீண்ட வாக்கில் வெப்பக்காற்று  
ஊதற்பையைப்படுக்க வைத்து அதற்குத்தேவையான நெருப்பும் பக்கத்தில் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.



படங்களில் மட்டுமே பார்த்திருந்த வெப்பக்காற்று  ஊதற்பையை நேரில் பார்க்க அதில் சவாரிச்செய்யப்போகிறோம் என்று 
நினைத்த பொழுதே சிலிர்ப்பாகத்தான் இருந்தது. ஆசையாய் இறங்கக் கதவைத் திறந்தோம்.  வெப்பக்காற்று  ஊதற்பையை செலுத்தும் டச்சு அதிகாரி பரபரப்பாய் வந்து  கதவைத் திறந்து வானிலை மோசமாக இருக்கிறது என்று கூறினார். 

எங்களது சவாரியை வேறு ஒரு நாள் மாற்றிக்கொள்ளவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ அறிவுரைக் கூறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் வருத்தமான செய்தியைக் கூறிவிட்டு கதவை அடைக்கும் முன் ஓட்டுநரை எங்களை பத்திரமாக திரும்பி விடுமாறு பணித்தார். கதவை மூடும் நேரத்தில் வானில் மட்டும் மின்னல் வெட்டவில்லை...எங்கள் மனதிலும் மின்னல் அடித்திருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற விபத்து போன்று ஏதேனும் நடக்காமல் காக்கவே இயற்கை இடையூறு செய்திருக்கிறது என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டோம். அமீரகத்திலிருந்து கிளம்பும் கடைசி நாளில் இவ்வாறு நடந்ததால் சவாரியை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கவும் முடியவில்லை.சரி , சவாரிக்காகச் செலுத்தியிருந்த பணமாவது திரும்பக் கிடைத்ததே என்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டோம். அருமையான வெப்பக்காற்று  ஊதற்பைச்சவாரியை என்னால் தான் உணர முடியவில்லை ...நீங்களாவது உணர்ந்து பார்க்கிறீர்களா??