Wednesday, April 19, 2017

மந்திபிரியாணியும் உடைந்த மண்பாண்டமும்

நண்பர்கள் குழுவில் சில குடும்பங்கள் வேலைப்பழு போன்ற  சில காரணங்களால் வார விடுமுறையைக் கொண்டாட வரமுடியாததால் சுஜிசதீஷ் தம்பதியனருடன் உம் அல் குவைனைச் சுற்றிப்பார்க்க ஆர்வத்துடன் பயணப்பட்டோம். சதீஷ் தனது நண்பர் வினோத் அங்கே வசிப்பதால் அவருடன் சேர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகக்குறைவான மக்கள் எண்ணிக்கைக் கொண்ட உம் அல் குவைனின்  முக்கியமான இடங்களை ஒருநாளில் பார்த்துவிடலாம் எனக்கூறியிருந்தார். 2007 கணக்கெடுப்பின் படி 72000 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உம் அல் குவைன் என்ற பெயரே வித்தியாசமாய் இருக்கிறதே என்று அதன் பெயர்க்காரணத்தை ஆராய்ச்சி செய்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் 'இருசக்திகளின் தாய்' என்ற அதன் அர்த்தம் அவர்களின் கடல் வணிகத்தை குறிப்பதாய் அமைந்திருந்தது.



தண்ணீருடன் உள்ள  கேளிக்கைப்பூங்காக்களின் விலைக்கூடுதலான நுழைவுச்சீட்டை நினைத்து கலங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது  ஐக்கிய அரபு அமீரகத்திலேயே  முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய தண்ணீர்  பூங்காவான உம்அல்குவைனில் உள்ள டிரீம்லான்ட் அஃகுவா பூங்கா (dream land aqua park). கொடுக்கும் பணத்திற்கான மதிப்பிற்கு  ஏதுவாக ஒரு முழுநாளை சாகசசவாரிகளிலும் தண்ணீர் விளையாட்டுகளிலும் நிறைவுடன் செலவழிக்கலாம் என்று, கருத்துக்கேட்ட அனைத்து நண்பர்களுமே பதிலளித்திருந்தனர்.


100 திராம்களுக்கு 30 வகையான சவாரிகள் என்றால் அனைவருக்கும் ஆர்வமும் கொண்டாட்டமும் பிறக்கும் தானே! முல்லா என்ற பெயர் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அரசர்களாகவும், அவரது வம்சாவழியினர்கள் அடுத்தஅடுத்து உம்அல்குவைமை சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார்கள். குடும்பத்துடனான மகிழ்ச்சி எல்லா வகுப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசர் 1997ல்இப்பூங்காவைத் தொடங்கி வைத்திருக்கிறார்.


வினோத் அவர்கள் ஒரு வங்கியில் பணிபுரிபவர், அதனருகிலேயே வசிக்கிறார் என்று கூறியிருந்ததால் அந்த வங்கியின் பெயரை மட்டுமே தடங்காட்டியில்(GPS) குறிப்பிட்டிருந்தோம்.தடங்காட்டி குறிப்பிட்ட வழியிலேயே உம்அல்குவைனை அடைந்து ஓரிடத்தில் நின்று நண்பரை அழைத்தால் , அவர் "அங்கே  எங்கடா போன?" என்று கேட்க எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த சிரிப்பு மட்டுமே வந்தது.

பின்பு நண்பர் வினோத் தான் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் சாலை வழியை பகிரியில்(whatsapp) பகிர்ந்து கொண்ட பின்னரே ஒருவழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்தோம். பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த துபாய் நகரத்தில் ஓங்கி உயர்ந்த கட்டடங்களைப் பார்த்திருந்த எங்களுக்கு போக்குவரத்து சமிக்ஞை கூட இல்லாத உம் அல் குவைம் பெருத்த ஆச்சர்யத்தைத் தந்தது.நம் நாட்டில் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்தால் ஏற்படும் அமைதியை உம்அல் குவைமை அடைந்தவுடன் பெற்றோம்.

கழிப்பறையும் குளியலறையும் சேர்ந்த ஒரு அறையோடு பொது அறையிலேயே சமையலறை  கொண்ட ஒரு வீட்டை( studio apartment) துபாயில் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து ஒருவருடத்திற்கு அதிகபட்சம் 45000 திராம்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இங்கே பெரிய வீட்டின் வாடகை கூட மிகக்குறைவு என்று கேட்டவுடன் பொறாமையாய்தான் இருந்தது.

மதிய நேரம் ஆகிவிட்டதால் அவரது வீட்டில் சற்று இளைப்பாறிவிட்டு மந்தி பிரியாணிக்கடைக்கு மதிய உணவுக்காகச் சென்றோம். அந்த உணவு விடுதியில் அரபியர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் ஒரு பெரிய தட்டில் இளம் இறைச்சியை அடுப்புக்கரியின் உதவியுடன் வாட்டி புகையில் சமைத்து எடுத்து பிரியாணிக்கு நடுவே வைத்திருந்தார்கள்.


மந்தி என்றால் அரபியில் பனித்துளி-ஈரப்பதம் என்று அர்த்தம். இறைச்சியின் மிருதுவான தன்மையைக்(juicy) குறிக்கும் பொருளில் சுவையைச் சுட்டிக்காட்டும் விதமாக அப்பெயரைச் சூட்டியிருந்தார்கள். ஏமன் நாட்டுப் பாரம்பரிய உணவாய் இருந்தாலும் வளைகுடா நாடுகள் , லெபனியா , எகிப்து, துருக்கி போன்ற பல நாடுகளிலும் மக்கள் இவ்வுணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சோறு, ஆடு அல்லது கோழி இறைச்சி, வாசனை மசாலாச்  சாமான்களை முதலியவற்றை வைத்து சுவையான மந்தி பிரியாணியைச் செய்து விடலாம்.

இஸ்லாமியர்கள் பண்டிகைகள், திருமணம் போன்ற நல்ல நாட்களில் அம்முறையில் பெரிய தட்டில் உணவுவகைகளை வைத்து குடும்பத்தினருடன் உணவு உண்பார்கள் எனக் கேள்விப் பட்டிருந்தேன்.முதன் முதலில் அவ்வாறு நண்பர்களுடன் தரையில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து உண்டது வித்தியாசமாய் இருந்தது.
வேலைப்பாடு மிகுந்த மிருதுவான போர்வையில் அமர்ந்து எல்லோரும் உணவு உண்ண என் மகள் சுற்றி சுற்றி வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.சால்னா என்று நாம் அழைக்கும் மசால் குழம்பை அவர்கள் உணவுப்பட்டியல் அட்டையில் சலோனா என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

உணவுக்குப்பின் எங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் படி
ஒரு விளையாட்டு அரங்கப்பூங்காவிற்குச் சென்றோம்.காசைக் கட்டணமாய்ச் செலுத்தி விளையாடி ஏதாவது பரிசுப்பொருட்களை வெல்வதாக அமைந்திருந்தது. உம் அல் குவைன் அருங்காட்சியம் மாலைதான் திறக்கும் என்பதால் நேரத்தைக் கடத்த குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுகிறோம் என்று சாக்கு கூறி நானும் சுஜியும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.


பின்பு அங்கிருந்து கிளம்பி ஒரு கடையில் சிறந்த தேநீரை வாங்கிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையில் சீராக ஓடவதற்கு என்று தனியாக பாதை அமைத்திருந்தார்கள். அச்சாலை குதித்து செல்வதற்கு ஏதுவாக மிக இலகுவாக இருந்தது.நானும் என் மகளும் அதில் குதித்து விளையாடினோம். அதுமட்டுமல்லாது உடற்பயிற்சி செய்வதற்கு என்று பல உபகரணங்களையும் வைத்திருந்தார்கள். எங்கள் குழந்தைகளோ எப்பொழுதும் போல அந்தபொடி பொடியான மண்ணை எடுத்து தலையில் போட்டுக் கொண்டார்கள். கடற்கரைக் காற்று உடலைத் தழுவ சுகமாகத்தான் இருந்தது.

உம் அல் குவைனுக்கு சென்று வந்த பின்னர் தான் தெரிந்தது நான் விரும்பிக் கேட்கும்  ஒரு தமிழ்ப்பண்பலையின் வானொலி நிலையம் அங்கு தான் அமைந்திருக்கிறது என்று. அலைவரிசை எல்லா ஐக்கிய அரபு அமீரகத்திலும் மட்டுமல்லாமல்லாமல் பக்கத்து நாடுகளுக்கும் கேட்பதற்காகவே அந்த சிறுநகரத்தில் நிலையத்தை அமைத்திருந்தார்கள்  என்று தெரிந்து கொண்டோம்.  

கணவர் வேலைக்குச் சென்றுவிட்டால் அன்றாட வீட்டுவேலைகள், குழந்தைப்பராமரிப்பு,  தனிமையென  மூழ்கியிருக்கும் எனக்கு அருகில் தோழராய் உலகநடப்புடன் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பண்பலைத் தொகுப்பாளர்களையும் வானொலி நிலையத்தையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தானே!


மாலை வேளையில் முதல் ஆட்களாய் உம் அல் குவைன் அருங்காட்சியம் திறந்தவுடன் 4 திராம்கள் கட்டணம் செலுத்தி அந்த பழமையான கட்டடத்திற்குள் நுழைந்தோம்.அருங்காட்சியத்தின் உள்ளே உடைந்த மண்பாண்டங்களைக் கூட அழகாகக் காட்சிப்படுத்தியிருக்க நம் நாட்டில் பாதுகாக்கப் படவேண்டிய பல நினைவுச்சின்னங்களையும் அரிதான பொருட்களையும் பராமரிப்பின்றி போட்டு வைத்திருக்கின்றோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்திருக்கும் எல்லா அருங்காட்சியங்களில் இருப்பது போலவே பீரங்கிகள், அதன் குண்டுகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

பழைய கோட்டை என்பதனால் அதிர்ந்து நடப்பதற்குக் கூட பயமாகவே இருந்தது. இந்தியா போன்ற பல நாடுகளுடனான வணிகத்தை அங்கு
வைத்திருந்த பணநோட்டுகள், நாணயங்கள் வழி தெரிந்து அதியசித்தோம்.
முதலில் அரசர்களின் கோட்டையாய் இருந்து கடல்வழி நுழைவை காவல் காத்த இடமே பின்பு காவல் நிலையமாய் மாறி பல ஆயுதங்களுடன் அருங்காட்சியமாய் அமைக்கப்பட்டிருந்தது.

உம் அல் குவைனிலும் பல உல்லாச ஓய்வு விடுதிகள் சிறப்பாக இருக்கும் என்பதனால் நண்பர் மற்றொரு முழுநாள் குடும்பத்துடன் 
விடுதியிலேயே தங்கி கழிக்க அழைப்பு விடுத்தார். வழியில் இயற்கை உபாதைக்காக ஒரு சாலையோர ஓய்வு விடுதியில் இறங்க நேரிட்டது. அதனருகேயே உயர்ரக மதுக்குடுவைகளை அலங்காரத்துடன் ஆடம்பரமாக அடுக்கிவைத்திருந்த மதுக்கடையை உள்ளே சென்று பார்வையிட வாயப்பும் கிடைத்தது.


மதுக்கடையைத் தாண்டிச் செல்லவே பயப்படும் பெண்களான நானும் , சுஜியும் உள்ளே பெரிய மதுக்கடையைச் சுற்றிப் பார்த்து முடித்ததும் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டோம்.இருவருமே சிறு குழந்தைகள் வைத்திருந்ததால்  அவர்கள் ஏதேனும் புட்டிகளை இழுத்துக்கீழே போட்டுவிட்டு அபராதம் கட்டி விடக்கூடாது என்ற எண்ணமே எங்களுக்குள் மேலோங்கி இருந்தது.

பெண்கள் நாங்கள் மதுக்கடைக்குச் சென்று பார்வையிடுவதா என்று தயங்கிக் கொண்டிருந்த வேளையில் பல பிலிப்பினோ, ஆப்ரிக்கப் பெண்கள் கூடையில் பலரகமான மதுப்புட்டிகளை எடுத்துச் சென்றதைப் பார்த்தபிறகு பார்வையிடத்தானே செல்கிறோம் என்று எங்களுக்குள்ளேயே சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றோம்.

துபாயில் மதுக்கடைகளில் மதுவாங்க சில விதிமுறைகள் உண்டு.
முதலில் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பணிபுரிபவர் மது அருந்துவதனால் ஆட்சேபனை எதுவுமில்லை என்றொரு சான்றிதழை வாங்கி அதனைக் காட்டிய பின்னரே மதுக்கடைகளில் மதுவை வாங்க முடியும். பெரிய அலுவலகங்களில் இதுபோன்ற அனுமதிச் சான்றிதழைப் பெறுவதே மிகவும் கடினம். ஆனால் சிறு அலுவலகங்களில் மது அருந்துவதற்கான அனுமதிச் சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

மதுப்பிரியர்கள் பெரும்பாலும் ஊரிலிருந்து வரும் நண்பர்களிடம் விமான நிலையத்திலேயே தீர்வைகட்ட தேவையில்லா ( duty free) கடைகளிலிருந்து மதுக்குடுவைகளை வாங்கி வரச்செய்திடுவார்கள்.
உம் அல் குவைன் போன்ற கெடுபடி இல்லா சிறுநகரத்தில் நிறைய மதுபானங்களை வாங்கிச் செல்லும் வண்டிகளை நோட்டம்விட்டு கெடுபிடி உள்ள நகருக்குள் சென்றவுடன்  ஒரு சிலர் ஆள்அரவமற்ற இடத்தில் வண்டியை இடித்தோ மறித்தோ தடுத்து பணம் பறிக்க முயற்சி செய்வார்கள். 

வண்டியில் அவர்கள் நிறைய மதுபானம் வைத்திருப்பதால் காவல் துறையினர் வந்தார்கள் என்றால் நிறைய மதுபானம் வைத்திருப்பதை அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவோம் என்று மர்ம நபர்கள் மிரட்டவும் செய்வார்கள். நிறைய மதுபானம் வாங்கிக் கொண்டு வந்தவரோ திருடனுக்குத் தேள் கடித்தது போல காவல்
துறை அதிகாரிகளின்  உதவியையும் நாட முடியாமல் , மிரட்டும் நபர்களுக்கு பணமும் தர விருப்பமில்லாமல் குழம்பித் தவிப்பார்கள்.

அந்த விடுதியில் அப்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதிரடியான இசையுடன் இடுப்பாட்டம் நடந்திருக்க வேண்டும்.கூச்சலும் ஆனந்தக் கும்மாளமும் காதுகளைப் பிளந்தன.
உம்அல் குவைனில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அல் தூர்( al dour) என்றழைக்கப்படும் துறைமுகப்பட்டினம் 200 கிமுவிலிருந்து 200 கிபி வரை பல வணிகங்களில் ஈடுபட்டிருந்தது எனத் தெரிய வந்ததும் பிரமித்துப்போனோம்.


அதற்குச் சான்றாக அருகிலேயே பல்லாயிரம் கல்லறைகளை அங்கு வசிக்கும் வீடுகளினூடே பார்க்கும் பொழுது சற்று திகிலாகத்தான் இருக்கும்.சற்று பெரிய சமாதிகளென்றால் ஒரு குடும்பமே புதையுண்டு இருக்கும் என்றறிந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனோம்.



உம் அல் குவைனின் கடற்கரையை ஒட்டிய பல தீவுகள் கரைகளிலிருந்து பார்த்தாலே தெரியும்படி அமைந்திருந்தது.


ஹெப்ரூ , அரபிக் போன்ற தொன்மையான மொழிகள் பேசும் செமிட்டிக் இனத்தவர்களின் சூரிய கடவுளான ஷமாஷிற்கு ஒரு கோவிலைக் கண்டதும் அக்காலத்தில் முன்னோர்கள் எல்லோருமே ஆதவனை ஆராதனை செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து வியந்தோம்.


மணல்தீவுகளைச் சுற்றியிருந்த சதுப்புநிற காடுகள் ( mangroove)  பல சிற்றோடைகளால்  பிரிந்திருந்தன. பழைய உம் அல் குவைன் நகரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த பழைய துறைமுகத்திலே பாரம்பர்ய படகுகளை இன்றும் செய்து கொண்டுதான் இருந்தார்கள். பவளப்பாறைகளைக் கொண்டுச் சுண்ணாம்புச் சாந்துகளுடன் 
(plaster) கட்டப்பட்ட வீடுகளைக் கண்டதும் அவர்களின்
கடுஞ்சிக்கலான கட்டடக்கலை பிரமிப்பையே ஏற்படுத்தியது.

குனாஃபா(kunafa) எனப்படும் இனிப்பு வகையின் மேல் கணவருக்குத் தீராத காதல் இருந்ததால் எங்கு அதனைப் பார்த்தாலும் வாங்கிவிடுவார். வளைகுடா நாடு, துருக்கி, பாலஸ்தீனம் போன்ற பல நாடுகளில் பிரசித்திபெற்றிருந்த இனிப்பைப் பார்த்ததும் கணவர் ஆர்வமாய் வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தார். சேமியா, பாலாடைக்கட்டி, பன்னீர், பிஸ்தா, சக்கரைத் தண்ணீர் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு செய்திருந்த இனிப்பு தித்திப்பாய்தான் இருந்தது.



சவுதியிலிருந்த பொழுது தினமும் ஒரு துண்டு குனாஃபாவது சாப்பிட்டுவிடுவேன் என்று கணவர் கூற அனைவருமே என் கணவரைக் குனாஃபாவின் காதலன் என்று கிண்டலடித்தனர்.
பாலஸ்தின் , துருக்கி, அசர்பைஜான்,போஸ்னியன் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட பல வகையான குனாஃபாவில் எல்லாமே சுவையாய்த்தான் இருந்தது. பணியாளர் பிலிப்பினோ என்பதால் முகத்தைப் பார்த்து அவரது நாட்டுக்காரர்களுக்கு மட்டும் சுவைக்க சிறுதுண்டுகளை தந்து கொண்டிருந்தார்.

மாலை நேரத்தில் நான் திண்டுக்கல்லில் பயின்ற பொறியியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் மாணவர்களின் கூட்டம் துபாயில் நடைபெற இருந்ததால் அவசரமாக உம்அல்குவைன் சுற்றுலாவை முடித்து துபாய் திரும்பினோம். கல்லூரிப் படிப்பை முடித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த அனைத்து மாணவ மாணவியர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்ததால் 25 வருடங்களாய் கல்லூரியிலிருந்து வெளியேறியிருந்த அனைத்து வயதிலான மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. 

2010ல் எனது கணினிப் பொறியியல் துறையில் நான் சிறந்த மாணவிக்கான விருது பெற்றேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பெருமையுடன் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசியர்களுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டேன்.நான் பயின்ற நான்கு வருடங்களில் எந்திரம் மற்றும் கட்டடக்கலைப் பொறியியல் பயின்ற மாணவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்க நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று கூறி அன்பைப் பகிர்ந்து கொண்டோம். 

கல்லூரியைப் பற்றி பேசி,  கல்லூரியின் வளர்ச்சிக் காணொளிகளைக் கண்டவுடன் இனிமையான நினைவுகள் சிந்தையில் ஏறி கல்லூரி நாட்களும், நண்பர்களும் ஞாபகம் வர கண்களில் ஆனந்தக் கண்ணீர் பனித்தது. இரவு உணவு முடித்து புது நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியுடன் 7 அமீரகத்தில் ஒன்றான உம் அல் குவைனையும் முழுதாய்ச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.

7 comments:

  1. மந்தி பிரியாணி அருமை

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. குனாfa இனிப்பு பார்க்கவே ஆசையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் கிடைக்கும் என நம்புகிறேன்

      Delete
  3. ஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஈடுபாடும், கடின உழைப்பும் தெரிகிறது. வெகு சீக்கிரம் புத்தகம் வெளிவர வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete