Friday, December 16, 2016

பறந்து செல்வோமா - ஒரு பக்க சிறு கதை


அனுவுக்கு மிகவும் படபடப்பாக இருந்தது.குடும்பத்தினர் அனைவரும் விமான நிலையத்திற்குச் செல்ல நேரமாயிற்று,சித்தியிடம் கொடுத்து வைத்திருந்த நவீனப்புகைப்படக்கருவியை வாங்க வேண்டாமென்றுக் கூறியும், இல்லை இல்லை.... அதில் தான் புகைப்படம் பிரமாதமாக வரும் என்று கூறி அதை வாங்கிவிட்டுவருகிறேன் என்றுக் கிளம்பிச்சென்ற காதல் கணவன் கிருஷ்ணனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் அனு.எதிர்பார்த்ததைவிட சென்னையின் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்ததால் சித்தியின்வீட்டிலிருந்து புகைப்படக்கருவியைவாங்கி வீடுவந்துச் சேர்வதற்கே கிருஷ்ணனுக்கு நேரமாக விட்டது.இனிமேலும் தனிவண்டியில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமானத்தைக் கோட்டைவிட்டுவிடுவோமென்ற பயத்தில் மின்சார இரயிலில் பயணம்செய்ய ஆயத்தமானார்கள். 

தேனிலவுப்பயணம் திகில்நிறைந்த பயணமாய் மாறுமென்று அனுவும்,கிருஷ்ணனும் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.கிருஷ்ணனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பிள்ளைகளின் திருமணத்திற்குப்பின்னான முதல் கடல்கடந்த பயணம் நல்லபடியாக அமையவேண்டுமென்ற பதட்டம் பற்றிக் கொண்டிருந்தது.மின்சார இரயில் பயணத்தின் போது அனு கிருஷ்ணனிடம் நாம் விமானத்தைப்பிடித்துவிடுவோம் தானே என்று கேட்ட கேள்விக்கு கிருஷ்ணனின் அமைதி அனைவருக்குமே அச்சத்தை ஏற்படுத்தியது.கிருஷ்ணனின் அம்மா பேசாதே என்று சைகைச் செய்தார்.கிருஷ்ணன் கைக்கடிகாரத்தைப் அவ்வப்போதுப் பார்த்துக்கொண்டும் ஒருவேளை விமானத்தைத்தவர விட்டால் என்ன செய்வது என்று பயத்துடன் இறுக்கமான முகத்துடன் காட்சியளித்தான். பயணத்திற்கு முன் புகைப்படக்கருவி வாங்கச் சென்றிருக்க வேண்டாம்.கண்டிப்பாக வேண்டுமென்று கூறியிருந்தால் நானே சென்று வாங்கிவந்திருப்பேனே என்றங்கலாய்த்தார் கிருஷ்ணனின் அப்பா.

திரிசூலம் இரயில்நிறுத்தம் வந்தவுடன் கிருஷ்ணனும் அனுவும் ஓட்டமும் நடையுமாக விமானநிலையத்திற்குள் தலைதெரிக்க ௐடினார்கள். கிருஷ்ணனின் பெற்றோரும் பிள்ளைகள் எப்படியாவது விமானத்துக்குள் நுழைந்துவிடவேண்டுமென்ற பதைபதைப்புடன் பின்தொடர்ந்தார்கள்.வேகமாகச்சென்று பயண உடைமைகளை ஒப்படைத்தபின் கிருஷ்ணனின் பெற்றோருக்கு கண்ணாடிச்சாளரம் வழியே கையசைத்த சந்தோஷம் சிறிது நேரமே நீடித்தது.தனிமனித பாதுகாப்பச் சோதனையின் போது பெண்கள் வரிசை மிகவும் நீளமாக இருந்ததால், சிறிய ஆண்கள் வரிசையில்தன் பாதுகாப்புச் சோதனையை விரைவாக முடித்துவிட்டு கிருஷ்ணன்மட்டும் அனுவின் வருகைக்காகக் காத்திருந்தான்.

அனுவிற்குப் பதட்டத்தில் வரிசையில் முன்னே சென்று அங்குள்ள பெண்ணிடம் முன்னே செல்ல அனுமதி கேக்கும் எண்ணமும் வரவில்லை.விமான ஒலிபெருக்கியில் அனுவும்,கிருஷ்ணனுக்குமான கடைசி அழைப்பு வரவும்,இருவரும் கைப்பிடித்து விமான நுழைவுவாயிலருகே திரைப்பட இறுதி காட்சியில் வருவது போன்று ஓடிச்சென்று பயணச்சீட்டைக் காண்பிக்கவும் நேரம் சரியாக இருந்தது.அவசரமாக பயண இருக்கையில் அமர்ந்தபின் அந்தமான் அனுபவம் ஆரம்பமே அதிரடியாக இருக்கிறதே என்று அதிரச் சிரித்தாள் அனு.

2 comments: