Thursday, December 8, 2016

சொல்லிட்டாளே!!!! - ஒரு பக்க சிறு கதை

வேலு நான்கு நாட்களாக நிம்மதியின்றித் தவித்துக்கொண்டிருந்தான்.  பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் பொழுதே,தலைமை ஆசிரியரின் அறையில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கு வேலு ஏச்சு வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில்,மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டையும்,பரிசையும் பெற்றுக்கொள்ள வந்தவள்தான் அதிதி.அவளை முதல்முதலில் பார்த்தபொழுதே வேலுவிற்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது.பள்ளி வளாகத்தில் கண்ணாடி அணிந்து சற்றே பூசினார்ப்போல் இருந்த அதிதியை கண்டாலே வேலுவின் நெஞ்சம் பரவசமடைந்தது.

கல்லூரி காலங்களிலும்,அவளை ஒருமுறையேனும் பார்ப்பதற்காக,நெடுந்தொலைவிலுள்ள   அதிதி படிக்கும் கல்லூரிக்குக் காரணமேதும் இல்லாமல் நண்பனின் உதவியுடன் சென்றது அவனின் காதலை அவனுக்கே உணர்த்தியது.மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அவளின் அலைபேசி எண்கள் கிடைத்தது ஆனந்தத்தைக் கொடுத்தாலும்,அவள் நண்பர்கள் அவள் மிகவும் கண்டிப்பானவள்,காதலையெல்லாம் காதுகொடுத்தும் கேட்கமாட்டாளென்றது கிலியை ஏற்படுத்தியது.

அவளிடம் காதலைச் சொல்வதற்காகவே குவிந்து கிடந்த தோல்வியுற்ற பாடங்கள் அனைத்தையும் ஒரே முயற்சியில் தேர்ச்சிப் பெற்றதும்,உயர்கல்விப் படிப்பை முடித்ததும்,புகழ் பெற்ற அலுவகத்தில் இயந்திரப்பொறியாளராகப் பணிபுரிவதையும் அதிதியின் மீது கொண்டிருந்த அதீதமான காதல் செய்யும் மாயயைதான் என்று எண்ணிச் சிரித்துக்கொண்டான். முகப்புத்தகத்தில் அவனது நண்பர்களாவதற்கான கோரிக்கையை அவள் ஏற்றுக்கொண்ட பொழுது காதலையே ஏற்றுக் கொண்டதுபோல் குதூகலம் கொண்டான்.

அவளது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து பலமணிநேரம் பார்த்துக் கொண்டிருப்பதிலும் உற்சாகம் கொண்டான். பிறந்தநாள் வாழ்த்து போன்று ஏதேனும் காரணங்கள் கொண்டு அதிதியிடம் பேசமுயற்சித்தான்.தெரிந்த பள்ளிநண்பரிடம் பேசுவதைப் போன்றே இருந்த அலைபேசி உரையாடல் சிறிதுவருத்தத்தை தந்தாலும்,அவள் பேசுவதை கேட்கும்பொழுது கிடைத்த இனிமை சிலிர்ப்பையும் சேர்த்தே தந்தது.காதலைச் சொல்வதற்குத்தான் நான்குநாள் ஒத்திகை. 

அதிதியின் கண்களை பார்த்து பத்துவருட ஒருதலைக்காதல்கதையையும், உன்னைத்தவிர வேறுப்பெண்ணிற்கு இதயத்தில் இடமில்லை,என் வாழ்கையின் தேவதை,அதிதியின் கணவன் வேலு என்பதிலேயே எனக்கு பெருமிதம் போன்றவை திரைப்படவசனமாய் தெரிந்தாலும் வேலுவின் கண்களில் காதல் தெரித்தது.அனைத்தையும் கேட்டபின்பு ’இப்பொழுதாவது காதலைச்சொன்னாயே?’உன்னைப்போன்ற ஒருவனைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.நான் உன்மேல் கொண்ட காதல்தான் உயர்ந்ததென்று உணர்த்துகிறேன் பாரென்று கண்சிமிட்டினாள் அதிதி.

5 comments: